search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை தொகுதி பிரச்சினை - சுதர்சனம் நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
    X

    சிவகங்கை தொகுதி பிரச்சினை - சுதர்சனம் நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

    சிவகங்கை தொகுதி பிரச்சினை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி சுதர்சனம் நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். #KSAlagiri #SudarsanaNatchiappan
    சென்னை:

    சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் கடும் இழுபறி நிலவியது. கடைசியில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதற்கு முன்னாள் மத்திய மந்திரி சுதர்சனம் நாச்சியப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வேட்பாளர் தேர்வு குறித்தும் குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கள் கட்சியில் தகுதியான வேட்பாளர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் 9 பேருக்குத்தான் வாய்ப்பு வழங்க முடியும். நான் 2 முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளை ஒருவாரம் செய்த பிறகு மாற்றப்பட்டேன். இதுபோன்ற தருணங்களில் யாருக்கும் வருத்தம் ஏற்படத்தான் செய்யும். வருத்தப்படக்கூடாது என்று நாம் சொல்ல முடியாது.



    அவர்கள் தங்கள் கருத்துக்களையும், வருத்தத்தையும் நாகரீகமாக தெரிவிக்க வேண்டும். தங்கள் ஆதங்கத்தை வெளியே சொல்வதற்கு பதிலாக மேலிடத்தில் சொல்லலாம். கார்த்தி சிதம்பரத்துக்கு நிர்ப்பந்தத்தின் பேரில் சீட் வழங்கி இருப்பதாக கூற முடியாது.

    யாரும் கட்சித் தலைமையை நிர்ப்பந்தப்படுத்த முடியாது. எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதெல்லாம் தவறு. நாங்கள் எதிர்பார்த்து கேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது. எல்லா வேட்பாளர்களுமே தகுதியானவர்கள்தான். தொகுதியை வைத்து அந்த தொகுதிக்கு தகுதியானவர்கள் இல்லை என்று யார் மீதும் குறை சொல்ல முடியாது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநில உரிமைகளை மீட்டெடுப்போம் என்று சொல்லி இருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது. ஜெயலலிதா கூட மத்தியில் இருந்து மாநில உரிமைகளை கேட்டு பெறுவதில் உறுதியாக இருந்தார்.

    ஆனால் தற்போதைய அரசு மாநில உரிமைகளை மோடியிடம் அடகு வைத்து விட்டது. மோடி தலைமையில் நாடு பாதுகாப்பாக இருப்பதாக முதல்-அமைச்சர் கூறுகிறார். இது ஊனமுற்றவர் மாந்தோப்பு காவல்காரராக இருக்கும் கதை.

    துல்லிய தாக்குதலை நமது விமானப்படை நடத்தியது உண்மை. அதில் பலியானவர்கள் எத்தனை பேர் என்பது இல்லையே. அதை பா.ஜனதா தலைவர் அமித்ஷா அரசியலாக்கி வருகிறார். இதற்கு முன்பும் பலமுறை துல்லிய தாக்குதல் நடந்தது உண்டு. ஆனால் யாரும் அரசியல் ஆக்கியது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது குமரி அனந்தன், தங்கபாலு, கோபண்ணா, செல்வ பெருந்தகை, ரஞ்சன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். #KSAlagiri #SudarsanaNatchiappan
    Next Story
    ×