search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட  பெட்ரோல் டோக்கன் மற்றும் பணம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட பெட்ரோல் டோக்கன் மற்றும் பணம்.

    சீர்காழியில் அ.தி.மு.க.வினர் பெட்ரோல் டோக்கன் வினியோகம் - தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

    ஆர்.கே. நகர் 20 ரூபாய் டோக்கன் போல் சீர்காழியில் அ.தி.மு.க.வினர் வினியோகித்த பெட்ரோல் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #LSPolls #ADMK

    சீர்காழி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி பாரா ளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

    இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் கட்சி தொண்டர்களுக்கு மது வாங்கி கொடுக்கிறார்களா? எனவும் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை ஆர்.கே. நகரில் நடந்த இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் கட்சி தொண்டர்களுக்கு பெட்ரோல் போட டோக்கன் கொடுத்ததை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வினர் சீர்காழியில் முதல்நாள் பிரச்சாரத்தை தொடங்கினர்.

    பிரச்சாரத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளான பா.ம.க, தே.மு.தி.க, த.ம.கா, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனத்துடன் திரண்டிருந்தனர்.

    இதனிடையே சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கட்சி கொடியுடன் இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் பலர் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் போலீசார் பெட்ரோல் பங்கில் திடீர் ஆய்வு நடத்தினர்.

    பறக்கும் படையினரை கண்ட கட்சியினர் பலர் அங்கிருந்து விரைந்து சென்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வின்போது கட்சி தொண்டர்கள் பலர் அ.தி.மு.க. பொறுப்பாளர் ஒருவரின் பெயருடன் கூடிய ரப்பர் ஸ்டாம்பு அச்சிட்ட டோக்கன் கொடுத்து ரூ.100 பெட்ரோல் நிரப்பியது தெரிய வந்தது.

    இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்து அடுத்த நிமிடம் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர் கையில் வைத்திருந்த 100 டோக்கன்களையும், ரூ. 10 ஆயிரத்து 870 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

    இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் கணக்கரிடம் விசாரணை செய்து அறிக்கை பெற்றனர். அறிக்கை பெற்ற பின்பு இந்த பெட்ரோல் செலவு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க.வினர் மூலம் வழங்கப்பட்ட பெட்ரோல் டோக்கன் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #LSPolls #ADMK

    Next Story
    ×