search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடவுளை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம்- மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பாய்ச்சல்
    X

    கடவுளை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம்- மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பாய்ச்சல்

    கடவுள் இல்லை என்று மார்தட்டிக் கொண்டு வீட்டில் இருப்பவர்கள் சாமி கும்பிடும் நிலை எங்களிடம் இல்லை என்று மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். #edappadipalanisamy #mkstalin

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

    இந்த தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் மூலம் தமிழகம் செழிக்க உள்ளது. நாட்டிற்கு நிலையான வலிமையான பிரதமர் தேவை. அப்படிபட்ட பிரதமர் வருவதற்கு ஏ.சி.சண்முகம் வெற்றிபெற வேண்டும்.

    தமிழகத்தில் நீண்டகால திட்டங்களை செயல்படுத்த அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.

    வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் தனது சொந்த செலவில் தொகுதி மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பேன்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 100 பேர் என 600 மாணவர்களுக்கு அவரது கல்வி நிறுவனத்தில் இலவச கல்வி அளிப்பேன் என உறுதியளித்துள்ளார்.

    அ.தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. படிக்கின்ற மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறோம்.

    மருத்துவ துறையில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. காப்பீடு திட்ட தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கர்ப்பிணி தாய்மார்களுக்கு 18 ஆயிரம் உதவிதொகை, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குற்றங்களை கண்டு பிடிக்க முடியாமல் கடவுளை விமர்சனம் செய்துள்ளார்.

    அவருக்கு சாமி மேல் நம்பிக்கை இல்லை என்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று விழுந்து விழுந்து சாமி கும்பிடுகின்றனர்.

    கடவுள் வழிபாடு தனி மனித சுதந்திரம். மு.க.ஸ்டாலின் கடவுளை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம்.

    உங்களை போல் கடவுள் இல்லை என்று மார்தட்டிக் கொண்டு வீட்டில் இருப்பவர்கள் சாமி கும்பிடும் நிலை எங்களிடம் இல்லை. நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். அந்தந்த மதங்களை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கிறது.

    நான் ஏதோ கொலை செய்து விட்டேன், கொள்ளையடித்து விட்டேன் என மு.க.ஸ்டாலின் பேசுகிறார். கொடநாட்டில் நடந்த கொள்ளையை கண்டு பிடித்தது. அ.தி.மு.க. அரசு.


    அதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்தது தி.மு.க. இதன் மூலம் அந்த கொள்ளையில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்கலாம் என பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    அந்த சந்தேகத்தின் மீது அம்மாவின் அரசு விசாரணை மேற்கொள்ளும்.

    மு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் குற்றங்களை கண்டு பிடிக்க முடியாது.

    ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் என்றால் தி.மு.க., தி.மு.க. என்றால் ஊழல்.

    மத்தியில் நிலையான ஆட்சி தேவை. நாட்டின் பாதுகாப்பு கருதி. அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து ஆற்காடு, ராணிப்பேட்டையில் அரக்கோணம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

    மக்களுக்கு சேவை செய்வதற்காக அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்துள்ளோம்.

    அ.தி.மு.க. அரசு பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகிறது. அவற்றுக்கு தீர்வு கண்டு வருகிறோம். அதனை எதிர்கொள்ளும் சக்தி எங்களுக்கு உள்ளது.

    ஜெயலலிதா மறைந்தபோது ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க பார்த்தார். சட்டமன்றத்தில் டேபிள் மீது ஏறி நின்று நடனமாடினார்கள். புத்தகங்கள் மற்றும் சபாநாயகர் மைக்கை பிடுங்கி வீசினார்கள். இவர்களா மக்களை காப்பாற்ற போகிறார்கள்.

    பொங்கலுக்கு ரூ.1000 வழங்கினோம். ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தோம். இதனை தி.மு.க. கோர்ட்டுக்கு சென்று தடுத்து நிறுத்த பார்க்கிறார்கள். ஏழைகளுக்கு பணம் கொடுப்பது என்ன தவறு. தேர்தல் முடிந்ததும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 100 நாள் வேலைதிட்டம் 200 நாட்களாக மாற்றப்படும்.

    15 ஆண்டு மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு பிரச்சனைகளை தீர்க்கவில்லை. புதிய திட்டங்கள் கொண்டு வரவில்லை. 2 ஏக்கர் இலவச நிலம் தருவேன் என்கிறார்கள். ஆனால் நில அபகரிப்பு செய்தார்கள். ஜெயலலிதா நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கொண்டுவந்து நிலங்களை மீட்டு கொடுத்தார்.

    இஸ்லாமிய மக்களுக்கு அரணாக இருந்து பாதுகாப்பது அ.தி.மு.க. அரசு. மதிப்பூதியம் ரூ.20 ஆயிரம், நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி, சந்தன கூடு விழாவுக்கு சந்தனம், ஆகியவற்றை ஜெயலலிதா அரசு வழங்கி வருகிறது.

    முத்தலாக் சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க. எம்.பிக்கள் குரல் கொடுத்தனர். இதனால் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

    எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு துணையாக இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். #edappadipalanisamy #mkstalin

    Next Story
    ×