search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. கூட்டணி தேங்கி கிடக்கும் குட்டை- டாக்டர் ராமதாஸ் பேச்சு
    X

    தி.மு.க. கூட்டணி தேங்கி கிடக்கும் குட்டை- டாக்டர் ராமதாஸ் பேச்சு

    தி.மு.க. கூட்டணி தேங்கி கிடக்கும் குட்டை என்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #ramadoss #dmk

    ஆற்காடு:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து ஆற்காடு பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு தெளிந்த நீரோடை, அதனை அள்ளி பருகலாம். ஆனால் தி.மு.க. தலைமையில் அமைத்துள்ள கூட்டணி தேங்கி கிடக்கும் குட்டை ஆகும்.

    அ.தி.மு.க.வில் சாமானியர்கள் கூட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி, நான் டாக்டராக இருந்தாலும் அடிப்படையில் விவசாயி தான். அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும், பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையும் ஒத்த கருத்துகள் உடையது. தேர்தல் அறிக்கையில் உள்ள கருத்துக்களை நிறைவேற்றுவார்கள். நான் அவர்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பேன்.

    பா.ம.க.வின் தேர்தல் அறிக்கைகளை தி.மு.க.வினர் காப்பி அடித்துள்ளனர். நாங்கள் தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிப்பதற்காக பல நல்ல திட்டங்களை கூறியிருக்கிறோம். மாணவர்களின் கல்வி கடன் மற்றும் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் கூறியிருக்கிறோம்.

    மாநிலங்களுக்கு அதிக அதிகாரம், கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுவோம். தற்போது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். ஆனால் 18 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார்கள். எதையும் செய்யவில்லை. இவர்கள் போராடியது எல்லாம் தங்கள் கட்சிக்கு மத்தியில் நல்ல இலாகா வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள். நமது பிள்ளைகள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிறோம்.

    நூறாண்டுகளில் காங்கிரஸ் கட்சிதான் வாரிசு அரசியலை வளர்த்து வருகிறது. அதேபோல் இங்குள்ள குடும்ப அரசியலை மக்கள் வெறுத்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்தனர். அண்ணா ஏழையாக கட்சியை தொடங்கினார். ஏழையாகவே மறைந்தார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொன்னார்கள். ஆனால் இன்று ஏழைகளை ஒழிக்கிறார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியும், அ.தி.மு.க.வும் இணைந்து செயல்படுவதற்கு மாம்பழம் தான் சாட்சி, இரட்டை இலைதான் சாட்சி. அனைவரும் இணைந்து செயல்படுவோம். அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பான கட்சிகள். ஆனால் எதிரணியில் இருப்பவர்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #ramadoss #dmk

    Next Story
    ×