search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் திமுகவின் மாபெரும் கோட்டை- முக ஸ்டாலின் பேச்சு
    X

    சேலம் திமுகவின் மாபெரும் கோட்டை- முக ஸ்டாலின் பேச்சு

    சேலத்தில் மூன்றாவது நாளாக இன்று பிரசாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் திமுகவின் கோட்டை என குறிப்பிட்டுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் திருவாரூர் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மூன்றாவது நாளான இன்று சேலத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபனை ஆதரித்து பேசியதாவது:



    திமுகவின் சார்பில் என் பயணத்தை இன்று 3வது நாளாக நடத்தி கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொரு பகுதிக்கும் நான் செல்லும் போதும் ஒன்றை ஒன்று மிஞ்சக்கூடிய அளவுக்கு மக்கள்  திரண்டு ஆதரவு அளித்து வருகின்றீர்கள்.  இதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என தெரிகிறது.

    இதற்கான காரணம் திமுகவின் மீது நீங்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். மேலும் மத்தியிலே ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக, மாநிலத்தில் உள்ள அதிமுக மீது உள்ள வெறுப்பையும் இந்த கூட்டம் நிரூபித்துள்ளது. இந்த கோட்டை மைதானம் நிறைந்து இருப்பதை பார்த்தால், கோட்டையை நாம் பிடிப்பது உறுதி.



    சேலம் திமுகவின் மாபெரும் கோட்டை. இந்த கோட்டையிலே இவ்வளவு மக்கள் ஆதரவு தர மிக முக்கியமான காரணம்  மறைந்த வீரபாண்டியார் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு இதே சேலத்தில் கலைஞர் கருணாநிதியின்  முத்து விழா மாநாட்டினை வீரபாண்டியார் முன்னின்று நடத்தினார். தோல்வியே அறியாமல் தொடர்ந்து வெற்றி பெற்ற சின்னம் தான் உதய சூரியன். திமுக சார்பில் யார் வேட்பாளர் என்றாலும் அவர் கலைஞர் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் நமது திமுக ஆட்சியிலே வேலை பெற முடிந்தது. தன்னம்பிக்கை உருவானது. கல்லூரிகள், பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டன. கோட்டை மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் அபீத் தெருவில் தான் தொடக்க காலத்தில் கழக தலைவர் ஒன்றரை ஆண்டு காலம் இருந்திருக்கிறார்.

    இந்த திராவிட இயக்கத்திற்கு அடித்தளம் சேலம் தான். சுயமரியாதை இயக்கம், நீதி கழகம் இணைத்து 1944 ம் ஆண்டு திராவிட கழகம் என மாற்றப்பட்டது இந்த சேலத்தில் தான்.

    விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ரத்து, மாற்று திறனாளிகளை மேம்படுத்தியது, ஏராளமான மருத்துவ கல்லூரிகள் திறப்பு, சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக மாறியது என பல்வேறு சாதனைகள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.

    இந்த சேவைகள் தொடர,  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்களில் ஒருவராக இங்கு நிற்கும், எஸ். ஆர். பார்த்திபனை வெற்றி பெற செய்யுமாறு பணிவன்புடனும், உரிமையுடனும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019


    Next Story
    ×