search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டப்பிடாரம் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படுமா? - தேர்தல் கமி‌ஷன் பரிசீலனை
    X

    ஒட்டப்பிடாரம் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படுமா? - தேர்தல் கமி‌ஷன் பரிசீலனை

    ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டு விட்டதால், அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Ottapidaram #EC
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.சுந்தர்ராஜ் போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.

    அந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சுந்தர்ராஜ் 493 வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியை தோற்கடித்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், “ஒட்டப்பிடாரம் தொகுதி வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்தது.

    இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் கடந்த ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியில் சேர்ந்தார். இதன் காரணமாக அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    அதை சென்னை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு உறுதி செய்தது. இதையடுத்து ஒட்டப்பிடாரம் தொகுதி காலியிடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

    மொத்தம் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் 18 தொகுதிகளும் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டன. கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் ஏற்கனவே காலியிடங்களாக இருந்தன.

    இதற்கிடையே ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் சிக்கி தண்டனை பெற்றதால் அவர் பதவி இழந்து ஓசூர் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. எனவே தமிழக சட்டசபையில் 21 தொகுதி இடங்களில் காலியிடங்களாக இருந்தன. இந்த 21 தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறி ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. மற்ற 18 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 18-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    3 தொகுதி தேர்தல் நடத்தாததற்கு தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 3 தொகுதிகளிலும் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், “வழக்குகளை வாபஸ் பெற்றால் தேர்தல் நடத்த தயார்” என்று அறிவித்தனர்.

    இதை ஏற்று திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்த டாக்டர் சரவணன் தனது வழக்கை வாபஸ் பெற்றார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் நடத்தப்படுமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



    அதுபோல ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தான் தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் பெறுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அவரது வழக்கு நேற்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வழக்கை வாபஸ் பெறுவதாக” கிருஷ்ணசாமி மனு செய்தார்.

    அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை அவர் தள்ளுபடி செய்தார்.

    கோர்ட்டின் இந்த உத்தரவு நகலை உடனடியாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும்படியும் ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டு விட்டதால் அங்கு தேர்தலை எந்த தடையும் இல்லை. எனவே ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலை வேறு தேதியில் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Ottapidaram  #EC
    Next Story
    ×