search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.9.76 லட்சம் பறிமுதல்
    X

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.9.76 லட்சம் பறிமுதல்

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும்படை சோதனையில் சிக்கிய ரூ.9.76 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போதுசென்னையில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 300 பணம் இருந்தது தெரிய வந்தது.

    காரை ஓட்டிவந்தவர் சென்னை திருமுக்கூர் பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது36) என்பதும் இவர் கேரளாவில் வாகமான் என்ற இடத்தில் நிலம் வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    ஆனால் அந்த பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அதனை கைப்பற்றிய அதிகாரிகள் ஆண்டிப்பட்டி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

    தமிழக-கேரள எல்லையில் போடி முந்தல் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரி சின்னவெளியப்பன் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.40 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போடி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையின்போது கேரளாவில் இருந்து சாகுல்அமீது என்பவர் ஓட்டி வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.30 லட்சத்தை பறிமுல் செய்தனர்.

    கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவடிவேல் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காரை ரவி என்பவர் ஓட்டி வந்தார்.

    அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை கொடைக்கானலில் காய்கறிகள் வாங்குவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தபோதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து சார்பதிவகத்தில் ஒப்படைத்தனர்.  #LSPolls

    Next Story
    ×