search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை ஆதரித்து 22-ந்தேதி பிரசாரம்: வைகோ
    X

    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை ஆதரித்து 22-ந்தேதி பிரசாரம்: வைகோ

    தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து 22-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். #LSPolls #Kanimozhi #Vaiko
    சென்னை:

    தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும், புதுவையிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெறும். இந்திய அரசியலில் இந்த தேர்தல் திருப்புமுனையாக அமையும்.

    முல்லைபெரியாறு, காவிரி நதிநீர் விவகாரத்திலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதி அளித்ததிலும் மோடி அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்துத்துவா சக்திகளின் பிரதிநிதித்துவமாக இருக்கும் பா.ஜனதா தலைமையிலான அணி வெற்றிபெறாது. வெற்றிபெறக்கூடாது.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாராளுமன்ற மாநிலங்களவையில் குரல் கொடுத்து தி.மு.க.வுக்கு பெருமை சேர்த்த கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார்.

    நான் எனது பிரசாரத்தை 22-ந்தேதி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இருந்துதான் தொடங்குகிறேன். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, குறுக்குச்சாலை, குளத்தூர், விளாத்திகுளம் என்று முதல் நாள் பிரசாரத்தை மாலை 4 மணிக்கு தொடங்கி முடித்து மறுநாள் மாலை 4 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் பிரசாரத்தை தொடங்குகிறேன்.


    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகம் எங்கும் அவருடைய பிரசார பயணம் மகத்தான வெற்றியை இந்த அணிக்கு குவிக்க இருக்கிறது. நானும் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய விரும்புகிறேன். அதைத்தான் மு.க. ஸ்டாலினும் விரும்பினார்.

    எங்களது தேர்தல் அறிக்கை 20-ந்தேதி வெளியிடப்படும். 22-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி மாலை 4 மணி வரை என்னுடைய பிரசாரம் நடைபெறும். என்மீது பாசமும், பரிவும் கொண்ட அன்புத்தங்கை கனிமொழி மாபெரும் வெற்றிபெற்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அவரது குரல் ஒலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    கேள்வி:- தூத்துக்குடி தொகுதியில் உங்களை எதிர்த்து மு.க.அழகிரி மகன் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் செய்தி வருகிறதே?

    பதில்:- இது உங்களின் கற்பனையாகவும், ஆசையாகவும் இருக்கலாம். எனக்கு தெரிந்து அது உண்மை இல்லை.

    கே:- தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

    ப:- தி.மு.க. இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்கப்படுகிறதே தவிர வெளியில் இருந்து யாரையும் கொண்டுவந்து வாய்ப்பு வழங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Kanimozhi #Vaiko
    Next Story
    ×