search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக கூட்டணி தொகுதிகள் நாளை அறிவிப்பு - வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்
    X

    அதிமுக கூட்டணி தொகுதிகள் நாளை அறிவிப்பு - வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்

    பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு விவரம் நாளை வெளியிடப்பட உள்ளது. #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஜி.கே.வாசனின் த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எந்த கட்சிக்கு எந்த தொகுதி ஒதுக்குவது என்பது குறித்து அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    முதலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சந்தித்து பேசினார்கள். பிறகு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனும் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். என்றாலும் தொகுதிகளை முடிவு செய்வதில் எந்த சுமூக தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் இன்று 3-வது நாளாக அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நீடித்தது.

    தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜனதா 3 கட்சிகளும் சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க மிகவும் தயக்கம் காட்டுகின்றன. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் இந்த 3 கட்சிகளும் மிக மிக தீவிரமாக உள்ளன. இதனால்தான் தொகுதிகளை பெறுவதில் சமரசம் ஏற்படாமல் உள்ளது.

    தே.மு.தி.க.வுக்கு வட சென்னை தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வடசென்னைக்கு பதில் கிருஷ்ணகிரி தொகுதியை கேட்டு வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி தொகுதி பா.ம.க.வுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள். அதுபோல கள்ளக்குறிச்சி தொகுதியை பெறுவதிலும் தே.மு.தி.க. -பா.ம.க. இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது.

    மேலும் ஆரணி தொகுதிக்கு பதில் நாமக்கல் தொகுதியை தாருங்கள் என்றும் அ.தி.மு.க.விடம் பா.ம.க. கேட்டு வருகிறது.

    பாரதிய ஜனதா கட்சிக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சிவகங்கை, நீலகிரி ஆகிய 5 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சிவகங்கை ஆகிய 4 தொகுதிகளையும் பா.ஜனதா தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    நீலகிரி தொகுதியை பா.ஜனதா விரும்பவில்லை. அதற்கு பதில் ராமநாதபுரம் தொகுதியை விட்டுக் கொடுக்கும்படி பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடி உள்ளார்கள். அவர்கள் நீலகிரிக்கு பதில் ராமநாதபுரம் தொகுதியை கேட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்களிடமும் தேர்தலில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. இதுவும் தொகுதியை உறுதிப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், அரசகுமார் ஆகிய 4 பேரும் எப்படியாவது சீட் பெற்று விட வேண்டும் என்று டெல்லி தலைவர்களை நெருக்கியபடி உள்ளனர்.

    வானதி சீனிவாசன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மூலமாக டிக்கெட்டை உறுதி செய்ய போராடியபடி இருந்தார். நயினார் நாகேந்திரன் மாநில தலைவர்கள் உதவியுடன் காய்களை நகர்த்தி வருகிறார். இதனால் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய இயலாதபடி அ.தி.மு.க. தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    தே.மு.தி.க. தலைவர்கள் தங்களுக்கு வடசென்னை தொகுதி வேண்டாம் என்று கூறி வருகிறர்கள். அதற்கு பதில் திருவள்ளூர் தொகுதியை தாருங்கள் என்று அ.தி.மு.க.விடம் வலியுறுத்தியபடி உள்ளனர்.

     


    கூட்டணி பேச்சுவார்த்தையில்தான் தங்களது விருப்பம் நிறைவேறவில்லை. தொகுதி பங்கீட்டிலாவது தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி தே.மு.தி.க. தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க.விலும் 20 தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ளும் வி‌ஷயத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். சில தொகுதிகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பிடிவாதமாக விட்டுக் கொடுக்க மறுத்து வருகிறார்கள்.

    தஞ்சை, வேலூர், தென்காசி, புதுச்சேரி ஆகிய 4 தொகுதிகள் மட்டுமே தற்போது பிரச்சினை இல்லாமல் முடிந்துள்ளது. மற்றபடி பா.ம.க.வின் 5 தொகுதிகளும், பாரதிய ஜனதாவின் 4 தொகுதிகளும், தே.மு.தி.க.வின் 2 தொகுதிகளும் உறுதியாகி விட்டன.

    5 தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்பதில்தான் சமரசம் ஏற்படாத நிலை காணப்படுகிறது. இன்று மாலைக்குள் இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து விட்டது” என்றார்.

    அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து பேசி வருகிறார்கள். இன்று மாலைக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டால் இன்று இரவே யார்-யாருக்கு எந்த தொகுதி என்பதை அறிவிக்க அ.தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இல்லையெனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கண்டிப்பாக தொகுதி பங்கீட்டை விரைவில் முடிவு செய்து விட வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தீவிரமாக உள்ளது. கூட்டணி பேச்சு இழுபறியாக நீடித்ததுபோல் இல்லாமல் தொகுதி பங்கீட்டை திங்கட் கிழமைக்குள் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். நாளை தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க.வில் தொகுதி பங்கீட்டை முடித்தால்தான் நல்லது என்ற நிர்ப்பந்தம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

    இன்று அல்லது நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடித்தால்தான் அடுத்தக்கட்டமாக வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்த முடியும். அ.தி.மு.க.வில் ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. தொகுதி எது-எது என்று தெரிந்து விட்டால் வேட்பாளர்களை அறிவித்து விடலாம் என்ற நிலையில் அ.தி.மு.க. தலைவர்கள் உள்ளனர்.

    அதுபோல பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க தயார் நிலையில் உள்ளன. எனவே அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டால் வேட்பாளர்களும் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு விடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. சார்பில் 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நாளை காலை 9 மணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. அது முடிந்ததும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரம் வெளியிடப்பட உள்ளது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் பாராளுமன்ற தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அதன் பிறகு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    எனவே அ.தி.மு.க. கூட்டணியில் நாளை முதல் விறுவிறுப்பான தேர்தல் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK

    Next Story
    ×