search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும்- திமுக தீர்மானம்
    X

    விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும்- திமுக தீர்மானம்

    பாராளுமன்றத் தேர்தலின்போது, விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. #DMK #TNBypoll
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.

    இந்நிலையில், சென்னையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்யப்பட்டது.



    அதன்பின்னர், 18 சட்டமன்றத் தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம், விடுபட்ட அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    “3 தொகுதிகளில் தேர்தல் நடத்தாததற்கு கூறும் காரணங்கள் அடிப்படை ஆதாரமற்றது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம், உயர்நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த 2 தொகுதிகள் தொடர்பான வேறு எந்த வழக்குகளிலும் தேர்தலை நடத்தக்கூடாது என உத்தரவிடப்படவில்லை. தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் ஒரு அரசை மைனாரிட்டி அரசாக நீடிக்க அனுமதிப்பதா?

    எனவே, விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடப்படும். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முன்வராவிட்டால் நீதிமன்றம் சென்று தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #DMK #TNBypoll
    Next Story
    ×