search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிக் டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி
    X

    டிக் டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி

    பெரம்பலூர் அருகே கணவர் திட்டியதால் விஷம் குடிப்பது போல டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெரம்பலூர்:

    இன்றைய இளம்தலை முறையினரை கட்டிப்போட்டுள்ள சமூக வலை தளங்களில் வாட்ஸ் அப், பேஸ்புக், சேர் சாட், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுடன் டிக்- டாக் செயலி ஆட்டிப்படைத்து வருகிறது.

    டிக்-டாக் செயலி மூலம் வெளியாகும் வீடியோக்கள் சமூகத்தில் சீரழிவுகளை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆபாச வசனம், அளவுக்கதிகமான கவர்ச்சி உடைகளில் வெளியாகும் இந்த வீடியோக்களை பலர் ரசித்து தங்களது கருத்துக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இதுபோன்ற வீடியோக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை கவனமாக கையாள வேண்டும் என்றும் போலீசார் அறிவுரைகள் கூறி வருவதோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பலர் சிக்கி தவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே ஒரு சில நபர்கள் தாங்கள் செய்யும் விபரீத செயல்களையும் இந்த டிக்-டாக் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். உயிருக்கும் உலை வைக்கும் தற்கொலைகளை கூட பதிவிட்டு பதற வைக்கும் சம்பவங்களில் பெரம்பலூரை சேர்ந்த பெண்ணும் இணைந்துள்ளார்.

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா (வயது 24). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர்.

    பழனிவேலு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் அனிதா கணவர் ஊரான சீராநத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக டிக்-டாக் செயலி வந்தது.



    தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது போன்றவைகளை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்துள்ளார்.

    அவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அனிதா இருந்துள்ளார்.

    தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதனை தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்தார்.

    வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த அவர், பின்னர் தண்ணீரை குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை எட்டுகிறது. இப்படி வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.



    இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்கள்.
    Next Story
    ×