search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்
    X

    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்

    புதுக்கோட்டை வடக்குராஜவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொது மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கறம்பக்குடி, திருமயம், பொன்னமராவதி, கீரனூர், ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, மணமேல்குடி, இலுப்பூர், விராலிமலை உள்ளிட்ட தாலுகாக்களில் சுமார் 140 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளில் தினமும் ரூ.1 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளின் அருகே அரசின் உரிமம் பெற்ற டாஸ்மாக் பார்களும் செயல்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 10-க்கும் குறைவான பார்களேஅரசின் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன.

    பிற டாஸ்மாக் கடைகளின் அருகே தற்போது தமிழக அரசின் உரிமம் இன்றி பார்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு உரிமம் இன்றி செயல்படும் பார்களால் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1 கோடி வரை தமிழக அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு உரிமம் இன்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களில் அதிகாலை முதல் இரவு வரை நேரடியாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறது.

    இந்நிலையில் புதுக்கோட்டை வடக்குராஜவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் முன்பு நேற்று 2-வது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முதல் முறையாக கடந்த மாதம் (மே) 3-ந் தேதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், வடக்கு ராஜவீதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே உள்ள பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இது குறித்து பொதுமக்கள் சார்பில், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், போலீசாரிடமும் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் எனக்கூறினர்.
    Next Story
    ×