search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரை தாக்கி செயின் பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது
    X

    என்ஜினீயரை தாக்கி செயின் பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது

    தர்மபுரி அருகே என்ஜினீயரை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் இண்டூரை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது36). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தர்மபுரிக்கு வந்து இண்டூர் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இண்டூர் செல்வதாக கூறி செந்தில்முருகனை அழைத்து சென்றனர்.

    பென்னாகரம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த வாலிபர்கள் செந்தில் முருகனை தாக்கி அவரிடம் இருந்த மேதிரம், செயின் ஆகியவற்றை பறித்து கொண்டனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.10 ஆயிரம் எடுத்து தருமாறு மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.

    அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் செந்தில் முருகனை மீட்டனர். உடனே போலீசார் 3 வாலிபர்களையும் பிடிக்க முயன்றனர்.

    அதில் ஒரு வாலிபர் தப்பி ஓடும்போது காலில் அடிப்பட்டது. காலில் அடிப்பட்ட வாலிபருடன் சேர்ந்து 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மற்றொரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிடிப்பட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள ரெயில்வே லைன் பகுதியைச் சேர்ந்த வினோத் (21), ஊத்ததங்கரையைச் சேர்ந்த சிலம்பரசன் (21) ஆகியோர் 2 பேர் என்பதும், இதில் வினோத் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

    தப்பித்து சென்ற வாலிபர் 18 வயது நிரம்பாதவர் என்பதும், அவர்களுடன் சேர்ந்து இந்த 2 பேரும் செந்தில் முருகனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தப்பிஓடிய வாலிபரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரையும் நேற்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது காயம் அடைந்த வினோத்தை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும், சிலம்பரசனை சேலம் மத்திய சிறையில் அடைக்கவும், 18 வயது நிரம்பாத சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கவும் நீதிபதி உத்தர விட்டார்.

    இதைத்தொடர்ந்து சிலம் பரசனை சேலம் சிறையிலும், சிறுவனை சிறுவர் சீர் திருத்தப்பள்ளியிலும் அடைக்கப்பட்டார். காலில் காயமடைந்த வினோத்தை தர்மபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வினோத்துக்கு ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 2 காவலர்கள் உள்பட 3 போலீசார் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது வினோத் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து பாதுகாப்புக்காக சென்ற போலீசார் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய வினோத்தை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×