search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட கொள்ளையர்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் படத்தில் காணலாம்
    X
    கைது செய்யப்பட்ட கொள்ளையர்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் படத்தில் காணலாம்

    தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் கைது - செல்போன்கள், பறக்கும் காமிரா பறிமுதல்

    திண்டுக்கல் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் பறக்கும் காமிராக்களை பறிமுதல் செய்தனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் திருடு போவதாக போலீசில் தொடர் புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று நத்தத்திலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் ஒத்தக்கடை பாலம் அருகில் எஸ்.கொடையைச் சேர்ந்த குமார் (வயது 42) என்பவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக 2 இருசக்கர வாகனத்தில் தலா 3 பேர் வீதம் வந்த வாலிபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து சாணார்பட்டி போலீசில் குமார் புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேக்அப்துல்லா, சாந்தா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தேடி வந்தனர்.

    இதைதொடர்ந்து நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேரையும் மடக்கி விசாரணை நடத்தியதில் அவர்கள் கொள்ளையர்கள் என தெரிய வந்தது.

    அந்த கும்பல் சுமார் 30 செல்போன்கள் திருடியதையும், மேலும் பறக்கும் கேமரா(ட்ரோன்) ஒன்றையும் திருடியதை ஒப்புக் கொண்டனர். அதனை போலீசார் கைபற்றினர். தாங்கள் கொள்ளையடிப்பதற்கு பறக்கும் காமிராவை பயன்படுத்தி வீடுகளில் நோட்ட மிட்டு கொள்ளையடித்து வந்ததையும் ஒத்துக் கொண்டனர். இதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட நத்தம் தேத்தாம்பட்டி அஜய் (22), பூசாரிபட்டி சிவா (22), அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (22), அருள்முருகன் (22), பெருமாள்பட்டி ஸ்டாலின் (25) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இவர்கள் வேறு ஏதேனும் கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×