search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை - பாபநாசம் அணை நீர்மட்டம் 31 அடியாக உயர்வு
    X

    நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை - பாபநாசம் அணை நீர்மட்டம் 31 அடியாக உயர்வு

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்து இன்று காலை 31 அடியாக உள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காடு அருகே உள்ள கொடுமுடியாறு அணை பகுதியில் நேற்று 70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணை பகுதியில் 64 மில்லி மீட்டர் மழையும், கண்ணடியன் கால்வாயில் 27.8 மில்லி மீட்டர் மழையும், அம்பையில் 25.8 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. ராதாபுரம், சேரன்மகாதேவி, அடவிநயினார், குண்டாறு பகுதிகளில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்ததால் நெல்லை மாவட்டத்தில் வடக்கு பச்சையாறு அணையை தவிர மற்ற அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்தொடங்கியது. பாபநாசம் அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 2414.93 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    தண்ணீர் வரத்து அதிகளவில் இருப்பதால் நேற்று 20.40 அடியில் இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்து இன்று காலை 31 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 530 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 275 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 58.30 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 46.19 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று காலை 52.89 அடியாக உள்ளது.

    கொடுமுடியாறு அணைக்கு வினாடிக்கு 62 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நேற்று 2 அடியாக இருந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து இன்று காலை 11.41 அடியாக உள்ளது. கடனாநதிக்கு வினாடிக்கு 6 கன அடி தண்ணீரும், ராம நதிக்கு மற்றும் கருப்பா நதிக்கு வினாடிக்கு 2 கன அடி தண்ணீரும், அடவிநயினார் அணைக்கு வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது.

    இதுபோல் குண்டாறு, நம்பியாறு அணைகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் முன் குறுவை சாகுபடிக்கான விவசாய வேலைகளை இன்று தொடங்கினர்.
    Next Story
    ×