search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரிக்கரைகள் சீரமைப்பு - ஒரு மாதத்தில் முடிக்க திட்டம்
    X

    பூண்டி ஏரிக்கரைகள் சீரமைப்பு - ஒரு மாதத்தில் முடிக்க திட்டம்

    பூண்டி ஏரிக்கரைகள் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரி 1944-ல் கட்டப்பட்டது. இதற்காக அப்போது ஆன செலவு ரூ. 65 லட்சம் ஆகும்.

    அப்போதைய சென்னை மேயராக இருந்த சத்தியமூர்த்தி ஏரியை கட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டதால் ஏரிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

    ஏரியின் மொத்த உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். 760 சதுரமைல் நீர்வரத்து பரப்பளவு கொண்ட ஏரியில் 16 மதகுகள் (‌ஷட்டர்கள்) அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த இரும்பு ‌ஷட்டர்கள் மூலம் அதிகபட்சமாக வினாடிக்கு 1. 20 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்ற முடியும்.

    மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை ஏரியில் சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும்.

    மேலும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்புவதும் வழக்கம்.

    இந்த நிலையில் பருவ மழை பொய்த்ததாலும் கோடை வெயில் காரணமாகவும் பூண்டி ஏரி தற்போது முழுவதுமாக வற்றி விட்டது. ஏரியில் வெறும் 36 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. இதை தொடர்ந்து ஏரியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி ஏரியில் கசிவு நீர் கால்வாய்கள் சீர் செய்யும் பணிகள், பாசன கால்வாய்களில் தூர்வாரும் பணிகள், சேதமடைந்த கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மேலும் பூண்டியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்காக 2 புதிய மதகுகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    இந்த பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×