search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிக்-டாக் வீடியோவால், காதலில் விழுந்த 9ம் வகுப்பு மாணவி: வாலிபர் கைது
    X

    டிக்-டாக் வீடியோவால், காதலில் விழுந்த 9ம் வகுப்பு மாணவி: வாலிபர் கைது

    சென்னையில் டிக்-டாக் வீடியோவால் 9-ம் வகுப்பு மாணவியை காதலில் விழ வைத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    சென்னை:

    டிக்-டாக் வீடியோ சமூகத்தில் பல்வேறு சீரழிவுகளை ஏற்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    ஆண்களைவிட டிக்-டாக் வீடியோ மோகத்தில் இன்று பெண்களே மூழ்கி கிடக்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி வெளியான வீடியோக்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் உலா வந்து கொண்டிருக்கிறது.

    ஆபாசமான பாடல்களுக்கு பெண்கள் படு கவர்ச்சியாக நடனம் ஆடிய வீடியோக்களும் பரவி வருகின்றன. ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆபாசமாக வசனம் பேசி வெளியிட்டுள்ள டிக்-டாக் வீடியோக்களும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

    குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மத்தியில் டிக்-டாக் வீடியோ போதையாகவே மாறிப் போய் உள்ளது. இவர்களே டிக்-டாக் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற டிக்-டாக் வீடியோக்களால் இளம் தலைமுறையினரிடையே மோசமான கலாச்சாரம் பரவி வருவதாக அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். மதுரை ஐகோர்ட்டும் டிக்-டாக் வீடியோவுக்கு தடை விதித்திருந்தது. பின்னர் இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் சென்னையில் டிக்-டாக் வீடியோ மூலம் மாணவி ஒருவர் காதலில் விழுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை அரும்பாக்கத்தில் சிவசுப்ரமணியம் கோவில் தெரு பகுதியில் வசித்து வந்த 13 வயது மாணவி 9-ம் வகுப்பு முடித்துள்ளார். தந்தையை இழந்த இவர் தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார்.

    கடந்த 30-ந்தேதி மாலையில் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மாணவி நேற்று மாலை வாலிபர் ஒருவருடன் வீட்டுக்கு வந்தார்.



    இதுபற்றி ஆயிரம் விளக்கு போலீசில் மாணவியின் தாய் புகார் அளித்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அரக்கோணத்தை சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபர்தான் மாணவியை ஏமாற்றி காதலில் விழவைத்து அழைத்துச் சென்றது தெரிய வந்தது. வடபழனியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வைத்துதான் அசாருதீன் மாணவியை முதன் முதலில் பார்த்துள்ளார். பின்னர் டிக்-டாக் செயலி வீடியோ மூலம் மாணவி காதலில் விழுந்துள்ளார். இதன் பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் மாயமான மாணவியை அசாருதீன், அரக்கோணத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் 10 நாட்கள் கழித்து இருவரும் சென்னை வந்துள்ளனர். மாணவிக்கு 13 வயதே ஆவதால், அசாருதீன் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×