search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்வு
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்வு

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    தென்தமிழகத்தில் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளான அம்பிளிக்கை, கீரனூர், புதுச்சத்திரம், லக்கையன் கோட்டை, இடையகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த வெங்காயம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    மேலும் பலர் விற்பனைக்கு கொண்டு வராமல் பட்டறை அமைத்து வெங்காயங்களை பாதுகாத்து வந்தனர். கோடை காலம் தொடங்கியது முதல் காய்கறிகளின் விலை உயரத் தொடங்கி உள்ளது. தற்போது சின்ன வெங்காயமும் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த அளவே விளைச்சல் உள்ளது.

    கடந்த மாதம் ஒரு கிலோ நாட்டு வெங்காயம் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையானது. தற்போது விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனையாகிறது.

    மேலும் பருவமழை தொடங்குவதையொட்டி விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்ய நாற்று வெங்காயங்களை வாங்குகின்றனர். ஆனால் அந்த வெங்காயமும் விலை உயர்ந்து காணப்படுவதால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஒரு கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழை ஏமாற்றி விட்டால் சாகுபடி பாதித்து நஷ்டம் ஏற்படும் என சிலர் நாற்று வெங்காயம் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    தற்போது தாராபுரம், திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காய பைகள் 3 ஆயிரத்திற்கு மேலாக வந்துள்ளது. ஆனால் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

    Next Story
    ×