search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது
    X

    மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது

    எட்டயபுரத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவிர்பட்டி தெற்கு ஆறுமுகமுதலியார் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 35). இவருடைய மனைவி முனீஸ்வரி (32). இவர்களுக்கு முகேஷ் (11) என்ற மகனும், மஞ்சு (9) என்ற மகளும் உள்ளனர்.

    கேரளாவில் வேலை பார்த்து வந்த கருப்பசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்து விட்டார். தற்போது கோவில்பட்டியில் உள்ள ஒரு கோழிக்கடையில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தான் வீட்டுக்கு வருவார்.

    கருப்பசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று மாலையில் கருப்பசாமி வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது குழந்தைகள் விளையாடுவதற்காக வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் முனீஸ்வரி மட்டும் இருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி முனீஸ்வரியை சரமாரியாக வெட்டினார். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து கருப்பசாமி தப்பிச் சென்று விட்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் முனீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கருப்பசாமியை தேடி வந்தனர். அவர் கேரளாவில் பணிபுரிந்ததால் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும், கோவில்பட்டியில் உள்ள கோழிக்கடையில் வேலை பார்த்து வந்ததால் அங்கு பதுங்கியிருக்கலாம் எனவும் கருதப்பட்டது.

    அதனடிப்படையில் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் கருப்பசாமி இன்று காலை சரண் அடைந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவில்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று கருப்பசாமியை கைது செய்தனர்.

    பின்பு அவரை எட்டயபுரத்திற்கு அழைத்து வந்து மனைவியை கொன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×