search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர் தகுதி தேர்வு  - முதல் தாள் தேர்வை 5,960 பேர் எழுதினர்
    X

    ஆசிரியர் தகுதி தேர்வு - முதல் தாள் தேர்வை 5,960 பேர் எழுதினர்

    ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் நேற்று நடந்த முதல் தாள் தேர்வை 5,960 பேர் எழுதினார்கள்.
    கடலூர்:

    மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுவதும் 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. என்றாலும் தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டதால் காலை 7 மணியில் இருந்தே தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்தனர். அவர்களை தேர்வு மைய நுழைவு வாசலில் போலீசார் சோதனை செய்தனர். இதன் பின்னரே அவர்கள் தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்(ஒருங்கிணைந்த கல்வி திட்டம்) பொன்னையன், முதன்மை கல்வி அதிகாரி(பொறுப்பு) முனுசாமி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர். தேர்வு எழுத விண்ணப்பித்த 6,689 பேரில் 5,960 பேர் தேர்வு எழுதினர். 729 பேர் தேர்வு எழுத வரவில்லை.முன்னதாக தேர்வு மையத்துக்கு ஹால்டிக்கெட், நீல மற்றும் கருப்பு நிற பந்துமுனைப்பேனாவை தவிர வேறு எதையும்கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் தேர்வர்கள் கொண்டு வந்திருந்த செல்போன்கள், பைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் வாங்கி தனி அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். மேலும் சில ஆசிரியைகள் தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து வந்தனர். தேர்வறைக்கு செல்லும்போது குழந்தையை தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர்.

    தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர் தகுதி தேர்வு (2-ம் தாள்) நடைபெறுகிறது. இன்று நடைபெறும் 2-ம் தாள் தேர்வை மாவட்டம் முழுவதும் 47 மையங்களில் 17 ஆயிரத்து 735 பேர் எழுதுகிறார்கள்.
    Next Story
    ×