search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவையில்லாத இடத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது எங்கே? - திமுக எம்.பி.க்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
    X

    தேவையில்லாத இடத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது எங்கே? - திமுக எம்.பி.க்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி

    சேலத்தில் தேவையில்லாத இடத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது எங்கே? என்று தி.மு.க. எம்.பி.க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
    எடப்பாடி:

    நைனாம்பட்டியில் நடந்த அரசு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு நலத் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வினர் நேற்று நடந்த மேம்பாலம் திறப்பு விழாவில் வேண்டும் என்றே குற்றம் சாட்டுவதற்காக கலந்து கொண்டார்கள். மக்களுக்கு சேவை செய்கின்றவர்கள் என்ற அடிப்படையிலே அந்த நிகழ்ச்சியில் அவர்கள் பங்குபெறவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அவர்கள் சேலத்தில் எந்த பாலத்தை காட்டி கொடுத்தார்கள்?.

    நேற்று அவர்கள் பேட்டியின்போது தேவையில்லாத இடத்தில் பாலத்தை கட்டிக் கொடுத்ததாக சொல்லியிருக்கின்றார்கள். எந்த இடத்தில் தேவையில்லாத பாலம் கட்டி இருக்கிறோம் என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

    5 ரோடு, திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலை, இரும்பாலை, லீ பஜார், முள்ளுவாடி கேட், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரது நெரிசல் நிலவியது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தான் இங்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.

    கந்தம்பட்டி, அரியானூர், மகுடஞ்சாவடி பிரிவு சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் உயர் சேதம் ஏற்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

    நேற்று சேலத்தில் திறந்து வைக்கப்பட்ட மேம்பாலத்தை மேலும் அகலமாக இருந்திருக்க வேண்டும் என்று சேலம் தி.மு.க. எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்து இருக்கிறார். ஆனால் அவர் 8 வழிசாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். கட்டிடங்கள் இல்லாத காலி நிலமாக உள்ள பகுதியில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இவர் கட்டிடங்கள் நிறைந்த சேலம் மாநகர பகுதியில், கட்டிடங்களை இடிக்க சொல்லி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அகலமான சாலை அமைக்க சொல்வது சரியா? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.


    கேள்வி: ராஜன் செல்லப்பா அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்: அ.தி.மு.க.வில் யாரையும் தலைவர்களாக கருதவில்லை. அ.தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டரையும் தலைவராகத்தான் கருதுகிறோம். தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க. வளர்ச்சியை பார்த்து அ.ம.மு.க.வில் இருந்து படிப்படியாக தொண்டர்கள் அ.தி.மு.க.விற்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த பேட்டியை முழுமையாக படிக்கவில்லை. அதைப் பார்த்த பிறகுதான் அதைப் பற்றி சொல்ல முடியும்.

    10 நாட்களில் ஆட்சி கவிழும், ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அம்மாவின் அரசு 2 ஆண்டுகள் 4 மாதங்கள் கடந்து வெற்றிகரமாக ஆட்சி நடத்தி வருகிறோம். இந்த ஆட்சி எஞ்சிய காலம் முழுவதும் நீடிக்கும். அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று அம்மாவின் அரசு மீண்டும் அமையும்.

    உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராகி இருக்கிறோம். அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×