search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியை திணிக்கும் கஸ்தூரி ரெங்கன் அறிக்கையை தீயிட்டு கொளுத்துவோம்- வைகோ
    X

    இந்தியை திணிக்கும் கஸ்தூரி ரெங்கன் அறிக்கையை தீயிட்டு கொளுத்துவோம்- வைகோ

    இந்தி திணிப்பை உருவகப்படுத்தும் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தீயிட்டு கொளுத்துவோம் என்று கருணாநிதி பிறந்தநாள விழாவில் வைகோ பேசினார்.
    சென்னை:

    கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலையில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 38 பேருக்கும், இடைத்தேர்தலில் 38 பேருக்கும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 எம்.எல்.ஏ.க்களுக்கும் கருணாநிதியின் மார்பளவு சிலையை பரிசாக வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் நாராயணன், பேராயர் எஸ்றா சற்குணம், கிறிஸ்தவ மக்கள் நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் உள்பட கூட்டணி தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கி.வீரமணி பேசியதாவது:-

    “தமிழகத்தின் மீட்பு மட்டும் இல்லை. இந்தியாவின் மீட்பு மு.க.ஸ்டாலின் கையில் இருக்கிறது. இங்கே திராவிடம் வெற்றி பெற்று இருக்கிறது. இந்துத்துவம் தோல்வி பெற்றிருக்கிறது. வட புலத்தில் இந்துத்துவம் வெற்றி பெற்று இருக்கிறது. அங்கே திராவிடம் போய் சேரவில்லை. மோடி என்று சொன்னால் வித்தை. அவர் வித்தை செய்து தான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்” என்றார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:-

    “தேர்தலில் நமக்கு வெற்றியும், தோல்வியும் கிடைத்திருக்கிறது. தெற்கே வெற்றி பெற்று இருக்கிறோம். வடக்கே தோல்வி அடைந்திருக்கிறோம். தமிழகத்தில் நம்முடைய கூட்டணிக்கு தேர் ஓட்டிய மு.க.ஸ்டாலினால் தான் சிறப்பான வெற்றி பெற முடிந்தது.

    சிறு நெருடல் கூட இல்லாமல் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டணியை அமைத்தார். இந்த மதச்சார்பற்ற கூட்டணி ஒன்றுப்பட்டு இருக்க வேண்டும்” என்றார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

    தமிழக பள்ளிகளில் இனி இந்திக்கு இடமில்லை என்று சொன்னவர் அண்ணா. அப்படிப்பட்ட தமிழகத்தில் இந்திக்கு இடமில்லை. டெல்லி இனி பின் வாங்க போவதில்லை. மத்திய அரசின் எல்லா துறைகளுக்கும் இந்தி பெயர். நெஞ்சம் துடிக்கிறது.

    இந்தி திணிப்பை உருவகப்படுத்தும் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தீயிட்டு கொளுத்துவோம். தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி கொளுத்துவோம். மு.க.ஸ்டாலின் ஆணையிட்டால் நான் தயார். நீங்கள் தயாரா? இந்தி திணிப்பில் தளர்வு என்று சொல்லி மத்திய அரசு ஏமாற்று நாடகம் ஆடுகிறது.

    தமிழகத்தை காக்க மு.க.ஸ்டாலின் இருக்கிறார். எந்த இயக்கத்தால் (தி.மு.க.) வளர்ந்தேனோ, அந்த இயக்கத்துக்காக போராடுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விடுதலைசிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    கருணாநிதியை போன்று மு.க.ஸ்டாலினும் ராஜ தந்திரி என்பதை நிரூபிக்க கூடிய வகையில் இந்த தேர்தலில் வெற்றி அமைந்திருக்கிறது. மோடிக்கு எதிராக இங்கே கருத்துருவை உருவாக்கி, மிகச் சிறப்பாக கூட்டணியை கட்டி எழுப்பிய பெருமை மு.க.ஸ்டாலினை சேரும். ஒட்டு மொத்த இந்திய தேசத்தையும், தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்த பெருமையும் அவரை சேரும். ஒரே தேசம், ஒரே கலாசாரம் என்ற முழக்கத்தை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆபத்தானது. இதில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றும் கடமை பொறுப்பு மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது.

    பிற மொழி பேசுபவர்களின் குடியேற்றம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது மிகவும் ஆபத்து.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் விரைவில் வரத்தான் போகிறது” என்றார்.

    இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ரா.முத்தரசன் பேசும் போது, “தமிழ்நாட்டின் உரிமைகள், நலன்களை பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர வேண்டும்” என்றார்.

    ஆர்.எம்.வீரப்பன் பேசும் போது, “கருணாநிதிக்கு பிறகு யார் முதல்-அமைச்சர் என்பதில் சிக்கல் இருக்காது. மு.க.ஸ்டாலின்தான் முதல்-அமைச்சராக வருவார். ஏனென்றால் கருணாநிதியை விட அவர் அதிகமாக உழைக்கிறார்” என்றார்.

    கூட்டத்தில் கருணாநிதி மகள் செல்வி, மு.க.தமிழரசு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சேகர் பாபு, ஜெ.அன்பழகன், மாதவரம் சுதர்சனம், பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், வக்கீல் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×