search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரம்ஜான் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து
    X

    ரம்ஜான் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து

    ரம்ஜான் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
    சென்னை:

    வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்):- இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தின் முப்பது நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, இறையை நினைத்திருந்து நோன்பு எனும் மாண்புடன் தவம் இருந்தமைக்குக் களித்திருந்து மகிழ்ந்திடும் நன்னாள் ரமலான் திருநாள்.

    இந்த இனிய நன்னாளில், சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்):- இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானால் அருளப்பட்ட புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பை முறையாக கடைப்பிடித்து தங்களது கடமைகளை நிறைவேற்றுவது பெருமைக்குரியது.

    ரமலான் மாதத்தில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மேற்கொள்ளும் இறை வழிபாட்டால், நோன்பால் அனைத்து இன மக்களின் ஒற்றுமைக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும், பாதுகாப்புக்கும் உறுதியுள்ளது என்ற நம்பிக்கை இருக்கிறது.

    குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஏழை, பணக்காரன், நாடு, மொழி ஆகிய பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் அன்புடன், மகிழ்ச்சியுடன், சமாதானமாக நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து மாத இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவது பெரும் பாராட்டுக்குரியது, போற்று தலுக்குரியது.

    டி.டி.வி.தினகரன் (அ.ம.மு.க. பொதுச் செயலாளர்):- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தி, ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோருக்குக் கொடுத்து இன்புற்று, இறைவனை வணங்கி இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ரமலானைக் கொண்டாடுகிறார்கள்.

    நபி பெருமகனார் போதித்த அன்பு, ஈகை, மனித நேயம், கோபம் தவிர்த்தல் போன்ற நற்பண்புகளின் வழியாக அன்பே உருவான மனித சமுதாயத்தை அமைத்திட புனித ரமலான் நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம். மனம் நிறைந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    Next Story
    ×