search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலை குப்புற கவிழ்ந்த சுற்றுலா பஸ்சின் அடியில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மீட்டனர்.
    X
    தலை குப்புற கவிழ்ந்த சுற்றுலா பஸ்சின் அடியில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மீட்டனர்.

    சாத்தூர் அருகே விபத்து- சுற்றுலா பஸ் கவிழ்ந்து சிறுமி உள்பட 3 பேர் பலி

    சாத்தூர் அருகே இன்று அதிகாலை சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சாத்தூர்:

    கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த கண்ணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு சுற்றுலாவாக ஒரு பஸ்சில் புறப்பட்டனர். கோபாலகிருஷ்ணன், தேவயாணி, சுமதி ஆகியோர் தலைமையில் சுமார் 70 பேர் அந்த சுற்றுலாவில் பங்கேற்றனர். பாலக்காட்டைச் சேர்ந்த நிஷாத் (வயது 25) பஸ்சை ஓட்டினார்.

    அவர்கள் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு நேற்று கன்னியாகுமரி சென்றனர். அங்கு பத்மநாதபுரம் அரண்மனை மற்றும் கோவில்களை தரிசித்து விட்டு இரவில் ஊருக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 1 மணியளவில் கோவில்பட்டி- சாத்தூர் நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது. பெத்து ரெட்டியபட்டி விலக்கு அருகே வந்த போது சாலையோரம் இருந்த பள்ளத்தை டிரைவர் நிஷாத் கவனிக்கவில்லை. இதனால் பஸ் அந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    பஸ்சில் இருந்த அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் என்ன நடந்தது என்றே பஸ்சுக்குள் இருந்தவர்களுக்கு தெரியவில்லை. ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அய்யோ, அம்மா என கூச்சலிட்டனர்.

    அதிகாலை நேரம் என்பதால் அந்தப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் விபத்து குறித்து உடனடியாக தகவல் கிடைக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.

    இந்த விபத்தில் பெட்டம்மாள் (65), சரோஜினி (63), அப்புமணி மகள் நிகிலா (8) ஆகிய 3 பேரும் பஸ்சின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.

     காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் பலர் காயங்களுடன் கூச்சலிட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு கோவில்பட்டி மற்றும் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×