search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, நீலகிரி, திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் அவதி
    X

    கோவை, நீலகிரி, திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் அவதி

    கோவை, நீலகிரி, திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.


    கோவை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு, பவானி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறுவாணி குடிநீர் கோவை மாநகராட்சியின் 30-வார்டுகளுக்கும், வழியோர கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சிறுவாணியில் தற்போது நீர்மட்டம் குறைந்து விட்டதால் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பில்லூர் அணையில் போதிய அளவுக்கு தண்ணீர் இருப்பதால் கோவை மாநகராட்சியின் 70-வார்டுகள் மற்றும் வழியோர கிராமங்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் சத்தியமங்கலம் சாலையில் உள்ள ராட்சத நீர்தேக்கத் தொட்டியில் பில்லூர் குடிநீர் சேகரிக்கப்பட்டு பிரதானக்குழாய்கள் மூலம் சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யும் 30-வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆழியாறு, பவானி ஆற்று படுகையில் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்களில் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில பகுதிகளுக்கு சரியான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

    கோவை சிட்கோ, எல்.ஐ.சி. காலனி 98-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் 18 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கு குழித்தொண்டி வருவதால் அப்பகுதியில் வரும் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக பொது மக்களுக்கு பயன்பாடு இன்றி ரோட்டில் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். இதேபோல் பல்வேறு இடங்களிலும் 15 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான அணைகள் இருந்தாலும் கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 2 மாதங்களாக நீலகிரி மாவட்டத்திற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனால் குடிநீர் பஞ்சம் அதிகளவில் நிலவியது. குறிப்பாக குன்னூர் நகராட்சி பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.

    பொதுமக்கள் லாரிகளில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி வருகிறார்கள். வசதி இல்லாத ஏழைகள் நீண்ட தூரம் பயணித்து குளம், குட்டைகளில் இருந்து தண்ணீரை சேகரித்து வருகிறார்கள். கோத்தகிரி பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய முடியாததால் பல்வேறு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    குடிநீர் எப்போது வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துகிடக்கிறார்கள். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் தண்ணீரின் பயன்பாடு அதிகரிக்கும் எனவே என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பில்லூர் அணையில் தற்போது போதிய அளவு தண்ணீர் இருப்பதால் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை.

    ஆனால் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூர், வள்ளிபுரம் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இங்கு 10, 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    பொள்ளாச்சியில் தெற்கு , வடக்கு என இரு ஒன்றியங்கள் இருக்கிறது. இந்த 2 ஓன்றியங்களுக்குள் உள்ள 295 கிராமங்களுக்கு கிராம கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர ஊராட்சிகளில் தனியாக போர்வெல், கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக 295 கிராம கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்ததார் அதனை முறையாக பராமரிக்கவில்லை.

    இதனால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் முறையிட்டு உள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மறியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த பகுதிகளுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது 25 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×