search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி,பெரும்பாறை பகுதியில் 4 நாட்களாக இருளில் தவிக்கும் கிராமங்கள்
    X

    பழனி,பெரும்பாறை பகுதியில் 4 நாட்களாக இருளில் தவிக்கும் கிராமங்கள்

    பழனியில் மின்னல் தாக்கியதில் டி.வி. செட்டாப் பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகின. டிரான்ஸ்பார்மர் பழுதால் தாளையம் பகுதியில் 4 நாட்களாக கிராமங்கள் இருளில் தவிக்கின்றன.

    பழனி:

    பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினமும் பழனி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது இடி, மின்னல் பயங்கரமாக இருந்தது. இந்நிலையில் பழனி சேரன்ஜீவாநகர் பகுதியில் மின்னல் தாக்கியதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டி.வி., அதற்கான செட்டாப் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பழுதாகின.

    பழனி அருகே தாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையின்போது பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் தாளையம், போதுப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் மின்வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தாளையம் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சீரமைக்கப் பட்டன. ஆனால் அங்கு சீரான முறையில் மின் வினியோகம் செய்ய ப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து தாளையம் பகுதி மக்கள் கூறுகையில், 4 நாட்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மின்கம்பங்கள் சேதமடைந்ததால், மின்வினியோகம் பாதிக்கப் பட்டது. ஆனால் தற்போது அவை சீரமைக்கப்பட்டாலும், தாளையம், போதுப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் செய்யப்பட வில்லை. பகலில் சுமார் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக இரவில் கிராம மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். மேலும் விளை பயிர்களுக்கு நீர்பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது பல இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் மலை கிராமங்கள் அனைத்தும் இருளில் மூழ்கியது. நேற்று பெரும்பாறை பகுதியில் மின் வாரிய ஊழியர்கள் வந்து மின் கம்பங்களை ஊன்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் மஞ்சள்பரப்பு உள்ளிட்ட பல கிராமங்களில் எவ்வித பணிகளும் மேற்கொள்ள வில்லை. இதனால் மலை கிராமங்களில் மக்கள் 3 நாட்களாக இருளிலேயே தவித்து வருகின்றனர். மின்சார மோட்டார் இயக்கப்படாததால் மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. குறைந்த பட்சம் செல்போனுக்கு சார்ஜ் கூட செய்ய முடியவில்லை. இரவில் வன விலங்குகள் பயத்தால் வெளியில் செல்லாமல் வீட்டை பூட்டி முடங்கி உள்ளனர். அரசு ஆஸ்பத்திரி மற்றும் தபால் நிலையங்களில் மட்டுமே ஜெனரேட்டர் மூலம் ஒரு சில மணிநேரம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

    இதனால் மின் வாரிய ஊழியர்கள் விரைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×