search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவை திரித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 96 வயது மூதாட்டி
    X

    திருவை திரித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 96 வயது மூதாட்டி

    எட்டயபுரம் அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற திருவை திரித்தல் போட்டியில் 96 வயது மூதாட்டி வெங்கடம்மாள் வெற்றி பெற்றார்.
    கோவில்பட்டி:

    கோவில் திருவிழா என்றாலே முந்தைய காலத்தில் நிச்சயமாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி அதில் நடைபெறும். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். மேலும் இந்த கல்லை தூக்குபவர்களுக்குத்தான் பெண் கொடுப்போம் என்றும் தமிழர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

    அன்றைய காலத்தில் நெல்லை உலக்கையால் இடிப்பதும், குழம்பிற்கு அம்மியால் அரைத்த மசாலாவையும் பயன்படுத்தி வந்தனர். இதனால் கலப்படம் இல்லாத பொருட்கள் பயன்படுத்தப்பட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் முன்னோர்கள். மேலும் இத்தகைய வேலைகளை செய்து வந்த பெண்களுக்கு அது உடற்பயிற்சி போல் இருந்ததால் அவர்கள் ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்.

    ஆனால் ரெடிமேட் மசாலா, மிக்சி, கிரைண்டர், நவீன வாழ்க்கை முறையால் இன்றைய வாழ்நாள் குறைந்து வருகிறது. மேலும் கூடி விளையாடும் பண்டைய விளையாட்டுகள் மறக்கப்பட்டு இன்று நவீன உலகில் ஆண்ட்ராய்டு வருகையால் பேஸ்புக், வாட்ஸ்-அப் என அருகில் உள்ளவர்களையும் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் கலாச்சாரம் பெருகிவிட்டது.

    நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாக பல கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதே போல் எட்டயபுரத்தில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

    பல்லாங்குழி விளையாடியவர்கள்.


    உரல் இடிக்கும் போட்டியில் பங்கேற்ற பெண்கள்.

    எட்டயபுரம் அருகே அயன்வடமலாபுரத்தில் உள்ள புது அம்மன், காளியம்மன் கோவில் 35-வது ஆண்டு கொடை விழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று கோவில் முன்புள்ள திடலில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி, திருவை திரித்தல், அம்மி குத்துதல், பல்லாங்குழி, செதுக்குமுத்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர்.

    பெண்களுக்கான நவதானியங்களை கல் திருவையில் போட்டு திரிக்கும் போட்டியில் இளம்பெண்கள் முதல் மூதாட்டிகள் வரை பங்கேற்றனர். இவர்களுக்கு திரிப்பதற்காக பாசி பயறு வழங்கப்பட்டது. இதில் 96 வயது வெங்கடம்மாள் வெற்றி பெற்றார்.

    தொடர்ந்து நவதானியங்களை அம்மியிலிட்டு குத்து போட்டி நடத்தப்பட்டது. இதிலும் பெரும்பாலான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் பல்லாங்குழி, செதுக்கு முத்து ஆகிய போட்டிகள் அடுத்தடுத்து நடத்தப்பட்டன.

    பின்னர் இளைஞர்களுக்கான இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது. சுமார் ஒரு டன் எடை கொண்ட இளவட்ட கல்லை கிராமத்து இளைஞர்கள் தூக்குவதற்கு முயற்சித்தனர். இந்த போட்டியில் கீழ பூவானியை சேர்ந்த வீரசேகர், அயன் வடமலாபுரத்தை சேர்ந்த அசோக், ராஜேஷ் ஆகியோர் இளவட்ட கல்லை தூக்கினர். பெண்களும் இளவட்ட கல்லை தூக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டனர்.
    Next Story
    ×