search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்டபட்டி கிறிஸ்தவ ஆலயத்தில் தடுப்பு சுவர் உடைந்து கிடக்கும் காட்சி
    X
    கண்டபட்டி கிறிஸ்தவ ஆலயத்தில் தடுப்பு சுவர் உடைந்து கிடக்கும் காட்சி

    கத்திரி வெயில் விடைபெற்ற நாளில் பலத்த மழை - இடி தாக்கி தேவாலய சுவர் இடிந்தது

    முக்கூடல் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள கோபுரத்தில் ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட சிலுவையின் மீது இடி தாக்கியதில் சேதமடைந்து கீழே விழுந்ததில், தடுப்பு சுவர் பலத்த சேதமடைந்தது.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டத்தில் பெரும் தாக்கத்தை தந்த கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி அடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது.

    இந்நிலையில் அக்னி முடிவடையும் கடைசி நாளான நேற்று காலை கடும் வெயில் அடித்தது. பின்னர் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து செங்கோட்டை அதன் சுற்றுப்பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடும் வெப்பத்தை அனுபவித்து வந்த மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.

    மழையால் நீர்தேக்கங்கள், தடுப்பணைகள், பண்ணை குட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. குடிநீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வந்த யானை கூட்டங்கள் உட்பட விலங்குகளின் தாகத்தினை தீர்ப்பதற்கும் கோடை மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியம் அருகில் சாலையின் இருந்த பெரியமரம் ஒன்று நேற்றைய சூறாவளி காற்றில் வேரோடு சாய்ந்தது. அப்போது மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கூடல் குமரன் (வயது 61 ), அவரது மனைவி முத்தமிழ்வடிவு (57) மற்றும் மகன் விஜயகுமார் (30) ஆகியோர் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் சாய்ந்து விழுந்தது.

    இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்களும், மின்வாரிய ஊழியர்களும் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி காருக்குள் இருந்த மூன்று பேரையும் பத்திரமாக மீட்டனர். இதில் கார் மட்டும் சேதமடைந்தது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    முக்கூடல் பகுதியில் நேற்று மாலை பலத்த இடியுடன் லேசான மழை பெய்தது. அப்போது முக்கூடல் அருகே உள்ள கண்டபட்டி கிராமத்தில் உள்ள 110 ஆண்டு பழமையான கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள கோபுரத்தில் ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட சிலுவையின் மீது இடி தாக்கியதால் சிலுவை முற்றிலும் சேதமடைந்து கீழே விழுந்ததில் தடுப்பு சுவர் பலத்த சேதமடைந்தது. அந்த நேரத்தில் ஆலயத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டன.
    Next Story
    ×