search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கற்கள் இன்றி தெர்மாகோலினால் தயாராகும் மாடி வீடு -சுவாரஸ்ய தகவல்
    X

    கற்கள் இன்றி தெர்மாகோலினால் தயாராகும் மாடி வீடு -சுவாரஸ்ய தகவல்

    பெரம்பலூரில் கற்கள் ஏதுமின்றி தெர்மாகோலினால் ராமர் என்பவரின் வீடு கட்டப்பட்டு வருகிறது. இது குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் வசிப்பவர் ராமர். இவர் வீடு கட்டுவதில் புதிய முயற்சியை கையாண்டுள்ளார். பொதுவாக  அடுக்குமாடி வீடுகள் என்றாலே கற்கள், ஹாலோபிளாக், செங்கல் போன்றவற்றால் கட்டுவது தான் வழக்கம்.

    ஆனால், ராமரின் வீடு இவை ஏதுமின்றி தெர்மாகோல் மட்டுமே கொண்டு 1,150 சதுர அடி பரப்பளவுக்கு வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார். 50 சதவீதத்திற்கும் மேலான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.

    தொடக்கத்தில் அவரது குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் ராமர் எப்படியோ சம்மதம் வாங்கிவிட்டார். தெர்மாகோலால் வீடு கட்டும்  திட்டம் குறித்து ராமர் கூறுகையில், ‘இப்போது நிறைய மணல் தட்டுப்பாடு இருக்கிறது. மேலும் மணல் விலையும் குறைந்தபாடில்லை.

    செங்கல் உபயோகப்படுத்தினால் சுவரில் விரிசல் விழுவது வழக்கம். ஆனால், தெர்மாகோலில் அந்த பிரச்சனை இல்லை. தண்ணீரும் குறைந்த அளவே பயன்படுகிறது.



    முதலில் தெர்மாகோலில் வீடு என கூறும்போது எப்படி தாங்கும் என கிராம மக்கள் கேட்டு வந்தனர். ஆனால், பேஸ்மெண்ட் போட்ட பின்னரே கட்டிடம் தாங்கும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. இப்போது மக்கள் என்னை பாராட்டி வருகின்றனர். இந்த மாதிரி வீடு கட்ட ரூ.10 லட்சம் மட்டுமே போதுமானது’ என கூறினார்.

    இந்த தெர்மாகோல் கட்டிட பொறியாளர் ஆனந்தகீதன் கூறுகையில், ‘தெர்மாகோலை கொண்டு வெளிநாடுகளில் அதிகமாக வீடுகள் கட்டுகின்றனர். பொருட்கள் விரையம் ஆவது குறைகிறது. மேலும் மழை, புயல் போன்றவற்றை தாங்கும் சக்தி இதற்கு உண்டு.

    மணல், செங்கல் தட்டுப்பாட்டினால் கட்டுமான பணிகள் நிற்காது. இனியும் இந்த வீட்டிற்கு கருங்கல், செங்கல் தேவையில்லை. கம்பிகளை பயன்படுத்தி கட்டுவதனால் கட்டிடம் வலிமை பெறுகிறது’ என கூறினார்.

    கிராம மக்கள் இந்த வீட்டினை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் எனவும், ராமருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×