search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம்- ராகுல் காந்தியை சமாதானம் செய்த மு.க.ஸ்டாலின்
    X

    தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம்- ராகுல் காந்தியை சமாதானம் செய்த மு.க.ஸ்டாலின்

    காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என ராகுல் காந்தியிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததால் கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் அதிர்ச்சி அடைந்தார். தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்தார். இது தொடர்பாக காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தபோது, அவரது ராஜினாமா முடிவை காரிய கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று காரிய கமிட்டி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    மேலும், கட்சியில் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்வதற்கு ராகுல் காந்திக்கு முழு அதிகாரமும் அளிக்க, காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனினும், ராஜினாமா செய்வதில் ராகுல் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. சோனியா உள்ளிட்ட தலைவர்கள் சமாதானம் செய்தும் தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தேசிய அளவில் காங்கிரஸ் தோல்வியடைந்தாலும் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது காங்கிரசுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொலைபேசி மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பும் ராகுல் காந்தியை சமாதானம் செய்தார்.



    காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்றும், தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் அவர் கேட்டுக்கொண்டார். தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை நீங்கள் வென்றுள்ளீர்கள் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இதையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியையும் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

    Next Story
    ×