search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் இருந்து எம்.பி. ஆகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
    X

    தமிழகத்தில் இருந்து எம்.பி. ஆகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

    தமிழகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி மேல்-சபை எம்.பி. ஆக இருக்கிறார். இதற்காக, தி.மு.க.விடம் இருந்து ஒரு இடத்தை வாங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
    சென்னை:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை(மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் ஜூன் 14-ந் தேதி நிறைவடைகிறது. மீண்டும் அங்கிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை.

    காரணம், அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 126 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் உள்ளனர். ஆனால், ஒரு மேல்-சபை எம்.பி.யை தேர்ந்தெடுக்க 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.

    எனவே, அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேல்-சபை இடம் கூட கிடைக்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால், 1991-ம் ஆண்டு முதல் அங்கிருந்து தான் மேல்-சபை உறுப்பினராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். கவுகாத்தியில் வாடகை வீட்டில் தங்கியுள்ள அவருக்கு ஓட்டும் அங்கு தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவருக்கு ஓட்டு கவுகாத்தியில் தான் இருந்தது.

    தற்போதைய நிலையில், கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்- சபை உறுப்பினர்களின் பதவி எதுவும் காலியாகவில்லை. இதனால், மன்மோகன்சிங் மீண்டும் மேல்-சபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அதே நேரத்தில், தமிழகத்தில் தான் 6 மேல்-சபை எம்.பி.க்களின் பதவி காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது, அ.தி.மு.க.வை சேர்ந்த வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன், தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.ராஜா ஆகியோரது பதவி காலம் முடிகிறது.



    தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால், கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவி அக்கட்சிக்கு கிடைக்கிறது. அந்தப் பதவியை காங்கிரஸ் கட்சி கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசுவார்கள் என்று தெரிகிறது.
    Next Story
    ×