search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் - வைகோ
    X

    பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் - வைகோ

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்”, என வைகோ கூறினார்.
    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளது. அதன்படி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்தநிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் நேற்று சந்தித்தனர். அப்போது பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக இருவருக்குமே, வைகோ வாழ்த்து தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    எத்தனையோ தடைகளை உருவாக்கி பார்த்தும், கோடி கோடியாக பணத்தை கொட்டி பார்த்தும் தொல்.திருமாவளவனின் வெற்றியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல்வேறு தாக்குதல்கள் அவர் மீது ஏவப்பட்டன. தடைகள் அனைத்தையும் தாண்டி மக்களின் நல் ஆதரவை பெற்று, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

    ஜனநாயக சுடர் தமிழகத்தில் அணையாமல், இந்தியாவுக்கே வழிகாட்டும் சுடராக பிரகாசிப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவானது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் பெற்ற வெற்றிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இது ஒரு புதிய திருப்பம். இருவருமே பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார்கள். எழுத்தால், பேச்சால், எண்ணத்தால், செயலால் அனைவரையும் வசீகரிக்கக்கூடிய தலைவர் திருமாவளவனும், அதேபோல நல்ல நட்புடன் பழகும் எழுத்தாளரும், சிந்தனையாளருமான ரவிக்குமாரும் எம்.பி.க்களாக பாராளுமன்றத்துக்கு தமிழகத்துக்காக குரல் எழுப்ப செல்ல இருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×