search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்டி வதைக்கும் வெயில் - மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் திருச்சி மக்கள்
    X

    வாட்டி வதைக்கும் வெயில் - மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் திருச்சி மக்கள்

    திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வெளியில் நடமாட முடியாமல் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அக்னி வெயில் அதன் உக்கிரத்தை காட்டும் அதே வேளையில் நேற்று மாலை 4 மணியளவில் திருச்சி மாநகரில் கருமேகங்கள் திரண்டு காற்று பலமாக வீசி மழை பெய்வதற்கான அறிகுறியை காட்டியது. பலத்த மழை பெய்து வெப்பத்தை குறைக்கப்போகிறது என பொதுமக்கள் நம்பினர்.

    ஆனால் சில நொடிகளில் வீசிய பலத்த காற்று நின்றதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். புழுக்கத்தால் இரவு முழுவதும் அவஸ்தை அடைந்தனர். இருப்பினும் பொன்மலை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது இந்த சாரல் மழையானது வெப்பத்தினை மேலும் அதிகப்படுத்தியது.

    இதனிடையே திருச்சி மாவட்டம் மணப்பாறையை சுற்றியுள்ள புத்தாநத்தம், பண்ணாங்கொம்பு, பொய்கைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் திடீரென நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை ஒரு சில பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு மேலாகவும் மற்ற பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் பலத்த காற்றுடன் பெய்தது. கடுமையான வெயிலால் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்து வந்த மக்கள், இந்த திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.

    வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் பற்றாக்குறையாலும் மழை பெய்யாதா? என ஏக்கத்தில் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தற்போது பெய்த மழை மகிழ்ச்சியை தந்தது. ஆனால் மணப்பாறை நகர் பகுதிகளில் இந்த மழை பெய்யாமல் ஏமாற்றத்தை அளித்தது.

    மேலும் தொடர்ந்து மழை பெய்யுமா? என திருச்சி மாவட்ட பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


    Next Story
    ×