search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்டையில் நீர் இல்லாததால் தமிழகத்தில் தாமரை மலராது - கே.எஸ்.அழகிரி
    X

    குட்டையில் நீர் இல்லாததால் தமிழகத்தில் தாமரை மலராது - கே.எஸ்.அழகிரி

    குட்டையில் நீர் இல்லாததால் தமிழகத்தில் தாமரை மலராது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் அளித்து மக்கள் எங்களை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

    எங்கள் கூட்டணி சந்தர்ப்பவாதம் இல்லாத கொள்கை ரீதியான கூட்டணி. தமிழ்நாட்டில் கல்வி, விவசாயம் தொழில் ஆகியவற்றுக்கு வளர்ச்சியை விரும்புகிற மக்கள் எங்கள் அணிக்கு வாக்களித்துள்ளனர். வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றி.

    காங்கிரஸ் ஒரு மிகப் பெரிய இயக்கம் காங்கிரஸ் தோல்வி அடையவில்லை, காங்கிரஸ்காரர்கள் தான் தோல்வியடைந்துள்ளனர். அதை சரி செய்யலாம் சரி செய்ய முடியாது என்று எதுவும் கிடையாது நெப்போலியன், காமராஜர், அண்ணா, இந்திரா காந்தி ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.

    வெற்றியும் தோல்வியும் ஒரு வீரனுக்கு சகஜம் தென்னிந்தியாவில் வெற்றி பெற்றிருக்கிறோம் வரும் காலங்களில் வட இந்தியா மேற்கு இந்தியாவில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிப்போம்.

    காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் சறுக்கல் தானே தவிர, வீழ்ச்சி அல்ல. கடைசியில் தனிமனித விமர்சனத்தை முன்வைத்து பிரசாரம் செய்தவர் மோடி.

    தமிழகத்தில் மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும் என்கிற தமிழிசை கருத்துக்கு, ஒரு மலர் மலர்வதை யாரும் தடுக்க முடியாது. ஒரு மலர் மலர வேண்டும் என்றால் தண்ணீர் வேண்டும். நாங்கள் எதையும் தடுக்கவில்லை. ஆனால் நீரற்ற குட்டையில் எவ்வாறு தாமரை மலரும்?.

    இந்திய தேசம் ஒரு கூட்டாட்சி தத்துவம் உள்ளது. ஒரு மாநிலத்தை தனிமைப்படுத்த நினைத்தால் அது ஒரு சர்வாதிகாரம் அனைவருக்கும் சம உரிமை உள்ளது.

    இந்தியாவை வழிநடத்த ராகுலை தவிர வேறு சிறந்த தலைவர் யாருமில்லை. காங்கிரஸ் தொண்டர்கள் ராகுலை தான் விரும்புகின்றனர் என்றார். ராகுல் பதவி விலக்கூடாது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்.

    காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வோம் அதற்காக பேச்சு வார்த்தை எல்லாம் நடத்த மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×