search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. ஓட்டுகள் பாதித்ததா?
    X

    அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. ஓட்டுகள் பாதித்ததா?

    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பெற்ற ஓட்டுகள் பாதித்ததா? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அ.ம.மு.க. கட்சியை டி.டி.வி.தினகரன் தொடங்கினார். அந்த கட்சிக்கு அ.தி.மு.க.வினர் பலர் ஆதரவு தெரிவிப்பதாகவும், எனவே அந்த ஓட்டுகளை பிரித்து அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதிக்கும் என்றும் பரவலாக நம்பப்பட்டது.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய பாதிப்பை அ.ம.மு.க.வினால் எல்லா தொகுதிகளிலும் தர முடியவில்லை. இது அ.ம.மு.க.வுக்கு அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று நிம்மதியையும் கொடுத்துள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தர்மபுரி, சிதம்பரம், ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே அ.ம.மு.க. கட்சியால் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாதகத்தை ஏற்படுத்த முடிந்தது.

    தர்மபுரியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 ஓட்டுகளை பெற்றார். அங்கு அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ம.க. வேட்பாளர் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 ஓட்டுக்களை வாங்கியுள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர் 53 ஆயிரத்து 655 வாக்குகள் பெற்றார். இந்த வாக்குகள், பா.ம.க.வுக்கு கிடைத்திருந்தால் தி.மு.க.வுக்கு கூடுதல் நெருக்கடியை அளித்திருக்க முடியும்.

    சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 லட்சத்து 229 ஓட்டுகளை பெற்றது. அ.தி.மு.க.வுக்கு 4 லட்சத்து 97 ஆயிரத்து 10 வாக்குகள் கிடைத்தன. அ.ம.மு.க.வுக்கு 62 ஆயிரத்து 308 ஓட்டுகள் கிடைத்தன. இந்த ஓட்டுகள் கிடைத்திருந்தால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.

    ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 4 லட்சத்து 69 ஆயிரத்து 943 ஓட்டுகள் கிடைத்தன. அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 ஓட்டுகள் வந்தன. அங்கு அ.ம.மு.க.வுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 806 ஓட்டுகள் கிடைத்தன. அ.ம.மு.க.வின் ஓட்டுகள் கிடைத்திருந்தால் பா.ஜ.க. வெற்றி அடைந்திருக்க முடியும். ஆனால் வேறு தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை பாதிக்கும் அளவுக்கு அ.ம.மு.க.வுக்கு ஓட்டுகள் கிடைக்கவில்லை.

    அதுபோல 22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதித்துள்ளது.

    வடசென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் தலா ஒரு லட்சத்துக்கும் மேலாக ஓட்டுகளை வாங்கி மக்கள் நீதி மய்யம் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. சில இடங்களில் அ.ம.மு.க.வை விட அதிக ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் பெற்று 3-ம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×