search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து தீவிரவாதி என பேசியதற்கு எதிரான வழக்கில் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன்
    X

    இந்து தீவிரவாதி என பேசியதற்கு எதிரான வழக்கில் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன்

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறியதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போடப்பட்ட வழக்கில், இன்று கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கமலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை  கிளையில் கமல்ஹாசன்  மனு தாக்கல் செய்திருந்தார்.

    அம்மனுவில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே கமலுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  கமல் பேசிய வீடியோ பதிவு விசாரணையின் போது நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.



    அப்போது கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா? என கேள்வி எழுப்பினர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது ரேடியோவில் காந்தியை சுட்டவர் ஒரு இந்து என அறிவிக்கப்பட்டது என்று கமல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    கமலை கைது செய்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என அரசு தரப்பிடம் நீதிபதி கேட்டார். அதற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். அதனால் கைது பற்றி அச்சப்படதேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மே 20ம் தேதி வழங்கப்படும் என கூறி ஒத்தி வைத்தது. அதன்படி இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, கமலுக்கு முன் ஜாமீன் வழங்கினார்.


    Next Story
    ×