search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர் மீது நடவடிக்கை- ஓபிஎஸ் மகன் பேட்டி
    X

    பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர் மீது நடவடிக்கை- ஓபிஎஸ் மகன் பேட்டி

    வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே கல்வெட்டில் எம்.பி என பெயர் வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஓ.பி.எஸ் மகன் புகார் அளித்துள்ளார்.
    தேனி:

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலய கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

    இந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கல்வெட்டில் ரவீந்திர நாத்குமார் பெயர் மற்றொரு கல்வெட்டு மூலம் மறைக்கப்பட்டது.

    ரவீந்திர நாத்குமார் பெயர் இடம்பெற்ற கல்வெட்டை வைத்தது அப்பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதுபற்றி வேல்முருகன் கூறும்போது, எங்களை பொறுத்தவரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு எப்போதும் முதல்வர்.

    தற்போது துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்பதால் அவரின் பெயரை குறிப்பிட்டு இருந்தேன். தேனி பாராளுமன்ற வேட்பாளர் என பொறிக்க சொன்ன இடத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என தவறுதலாக இடம்பெற்றுவிட்டது என்றார்.

    போலீஸ்காரர் வேல்முருகன் ஏற்கனவே ஜெயலலிதா மறைந்த போது சீருடையுடன் மொட்டையடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். மேலும் காவிரி நீர் விவகாரத்தில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். கடைசியாக அவர் தேனி மாவட்ட ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது காவல்துறை கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார்.

    இதனிடையே ரவீந்திர நாத்குமார் சார்பாக அ.தி.மு.க வக்கீல் அணியினர் இன்று மதியம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

    இது தொடர்பாக ரவீந்திர நாத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் முடிவு வெளிவராத நிலையில் எம்.பி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது தவறானது. கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×