search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் பாட்டில் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு
    X

    ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் பாட்டில் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு

    தமிழகத்தில் அனல் காற்றுடன் கோடை வெயில் அதிகரிப்பதால் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் பாட்டில் கிடைக்காமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் அனல் காற்றுடன் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ராமநாதபுரம் பஸ் நிலையத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் தாகத்தை போக்க ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி செய்யவில்லை.

    இதனால் பயணிகள் அம்மா குடிநீர் பாட்டிலை வாங்கி குடித்து வந்தனர். சில தினங்களாக அம்மா குடிநீர் விற்பனை மையத்தில் குடிநீர் பாட்டிலை பார்க்க முடியவில்லை. இதனால் ஏழை,எளிய மக்கள் தனியார் கடைகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரை அதிக விலைக்கு வாங்கி குடித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் , திருப்புல்லாணி, சேதுக்கரை, தேவிபட்டினம், உப்பூர் ஏர்வாடியில் ஆன்மீக தலங்கள் உள்ளதால் வேண்டுதலுக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    தலைநகராக விளங்கும் ராமநாதபுரத்தில் பல்வேறு பணிகளுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு ஏராளமானோர் வருகின்றனர்.

    இவர்கள் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இறங்கி பின்னர் வேறு பஸ்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். குடிநீருக்காக அம்மா விற்பனை மையம் சென்றால் அங்கு குடிநீர் இருப்பதில்லை. ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை மையம் கண்காட்சி பொருளாக உள்ளது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குடிநீர் பாட்டில் கிடைப்பதில்லை.

    இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரி சங்கர் கூறுகையில், காரைக்குடி, தேவகோட்டை, மதுரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பஸ் நிலையத்தில் தட்டுப்பாடு இல்லாமல் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    ராமநாதபுரம் விற்பனையாளரிடம் கேட்டால் குறைவான எண்ணிக்கையில் பாட்டில் சப்ளை செய்யப்படுவதாக தெரிவிக்கிறார். ராமநாதபுரத்திற்கு மட்டும் ஏன் குறைவான எண்ணிக்கையில் குடிநீர் அனுப்புகின்றனர்? என்பது புரியாத புதிராக உள்ளது.

    தனியார் கடைகளில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் அம்மா குடிநீர் பாட்டில் பதுக்கப்படுகிறதோ? என்ற சந்தேகம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, அமைச்சர் மணிகண்டன், கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்ப உள்ளேன் என்றார்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் பாட்டில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×