search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன் யார் பக்கம் என்பதை சொல்ல வேண்டும் - கே.எஸ்.அழகிரி
    X

    கமல்ஹாசன் யார் பக்கம் என்பதை சொல்ல வேண்டும் - கே.எஸ்.அழகிரி

    கமல்ஹாசன் யாருடன் இருக்கிறார், அவர் நம்மவரா இல்லை வேறு ஒருவரா என்று சொல்ல வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மன்னார்குடி ஜீயர் அளித்துள்ள பேட்டியில் காந்தியும், கோட்சேவும் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் என்று கூறியிருக்கிறார்.

    அவர் கூறிய இந்த செய்தியைப் படிக்கும் பொழுது என் கண்களை நானே பிடுங்கி போட நினைத்தேன். ஜீயர் காந்தியையும் கோட்சேவையும் நேர்கோட்டில் கொண்டுவந்துள்ளார். இது சரியானதல்ல. தர்மனும் துரியோதனனும் ஒன்றா? கிருஷ்ணனும் நரகாசுரனும் ஒன்றா? இவர்கள் எல்லோரும் இந்துதான். எல்லோரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.

    ஆனால் நல்லதையும் தீயதையும் ஒன்றாக சொல்ல முடியுமா? ஜீயரை கேள்வி கேட்கின்ற தகுதி எனக்கு கிடையாது, ஆனால் இந்த கருத்தை ஒரு அரசியல் கட்சியோ, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். இந்துமகா சபை போன்ற அமைப்புகள் சொல்லியிருக்கலாம், மன்னார்குடி ஜீயர் சொல்லி இருப்பது காலத்தின் கொடுமை. இது மிகப் பெரிய பாவம். இதை குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

    ஒரு கருத்து சொல்வதற்கு மற்றொருவர் மாற்றுக் கருத்து சொல்லலாம். ஆனால் அதற்காக வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. வன்முறை யார் செய்தாலும் அது தவறுதான். காங்கிரஸ் கட்சி வன்முறைக்கு எப்போதும் துணை போகாது.

    அ.தி.மு.க.விற்கு விதிமீறல் என்பது கைவந்த கலை. விதிமீறல் அ.தி.மு.க.வின் தாரக மந்திரம். வேறு எந்த கட்சியாவது விதிமீறி செய்தால் அதுதான் ஆச்சரியம். அ.தி.மு.க. விதிமீறல் செய்வது ஆச்சரியம் ஒன்றுமில்லை.



    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பா.ஜனதா அல்லாத பிற கட்சிகளின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு தான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்து உள்ளவர்கள் ஓரளவு எங்களுடன் சேர்ந்து செயல்படுகிறவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம்.

    ஆனால் கமல்ஹாசன் தன்னை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அவர் யாருடன் இருக்கிறார் என்பதை சொல்ல வேண்டும். அவர் நம்மவரா இல்லை வேறு ஒருவரா என்று சொல்லவேண்டும்.

    மத்திய அரசு நடத்தும் தேர்வு முறைகளால் மாநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த பொதுத்துறை வங்கிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், பொது நிறுவனங்கள், ஐஐடி, ஆசிரியர் பணியிடங்கள் போன்ற காலியிடங்களுக்கு சுமார் 10,500 இடங்ளுக்கான தேர்வு நடைபெற்றது. அதில் தமிழகத்தில் வெறும் 600 பேர் மட்டும்தான் இடம்பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு மொழி தெரிந்தவர்களாக தான் இருக்கின்றனர்.

    தென் மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஐ.ஐ.டி.யில் நடத்தப்பட்ட தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி ஆகிய மூன்று மொழியில் மட்டும் தான் தேர்வு நடைபெற்று உள்ளது. இது கண்டனத்துக்குரியது.

    இந்த தேசம் பன்மொழி கொண்ட தேசம், மூன்று மொழியில் தேர்வு நடத்தினால் மீதமுள்ள 30 மொழியில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள். இது நம் நாட்டிற்கு ஆபத்து. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும். பிரதமர் மோடியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள்.

    இது வருங்கால மாணவர்களை வெகுவாக பாதிக்கும். இதை எங்களுடைய தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு எடுத்து சென்று இப்பிரச்சினைக்கு தீர்வு காணுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×