search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூளகிரி பகுதியில் இடி, மின்னலுடன் பெய்த மழையினால் கல் உடைக்கும் தொழிலாளி பலி
    X

    சூளகிரி பகுதியில் இடி, மின்னலுடன் பெய்த மழையினால் கல் உடைக்கும் தொழிலாளி பலி

    சூளகிரி பகுதியில் பெய்த கன மழையினால் புளிய மரத்தின் அடியில் நின்ற கல் உடைக்கும் தொழிலாளி இடி தாக்கி பலியானார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் சூளகிரி பகுதியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதையொட்டி சூளகிரி - உத்தனபள்ளி பகுதி சாமானபள்ளி மற்றும் சூளகிரி - கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும், இப்பகுதி தாபாஹோட்டல் மற்றும் பல வீடுகளில் மேற்கூறைகள் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் தூக்கி வீசப்பட்டன. மேலும் இப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகள் வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. சூளகிரி பகுதியில் சுமார் 58 மி.மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளது.

    சூளகிரிக்கு அடையாளப் பகுதியாக விளங்கும் இப்பகுதி மலையாகும். இந்த மலையினால் நேற்று வீசப்பட்ட பெரும் காற்றில் இருந்து சூளகிரி டவுன் பகுதி போன்ற சில பகுதிகள் பெரும் சேதத்தில் இருந்து தப்பியது. சுமார் மூன்று மணி நேரம் கனமழை பெய்ததை அடுத்து இப்பகுதி ஏரி மற்றும் குளங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது.

    இந்த நிலையில் சூளகிரி பகுதி மேரிமாதா ஆலயத்திற்கு பின் பகுதியில் சூளகிரி பி.டி.ஓ. பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது45) மற்றும் முனிராஜ் ஆகியோர் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை நேரத்தில் பெய்த மழையில் இருந்து தப்பிக்க இவர்கள் அப்பகுதியில் உள்ள புளிய மரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்தனர். அப்போது பலத்த மழையுடன் வந்த இடியினால் இவர்கள் தாக்கப்பட்டனர். இதனால் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயம் அடைந்த முனிராஜ் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    மின்னல் தாக்கி ஒருவர் பலியான இப்பகுதியில் பவர்கிரேடு நிறுவனம் சார்பில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடிதாக்காத வகையில் இடிதாங்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அரை கிலோ மீட்டர் தூரத்தில் நின்ற ஒருவர் இவ்வாறு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×