search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் விபத்து- நின்ற லாரி மீது வேன் மோதி டிரைவர் பலி
    X

    திண்டுக்கல்லில் விபத்து- நின்ற லாரி மீது வேன் மோதி டிரைவர் பலி

    திண்டுக்கல்லில் இன்று அதிகாலை நின்ற லாரி மீது வேன் மோதி விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நரியூத்து காலத்துகோட்டம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் நிர்மல் (வயது32) சரக்கு வாகன டிரைவர்.

    இன்று அதிகாலை இவர் சரக்கு வாகனத்தில் திண்டுக்கல்லை அடுத்த பித்தளைபட்டி பகுதிக்கு தென்னைநார் லோடு ஏற்ற வந்தார். லோடு ஏற்றியதும் ஊருக்கு திரும்பினார். திண்டுக்கல் ரெயில்வே பாலம் இறக்கத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற லாரி மீது வாகனம் மோதியது.

    இதில் வாகனத்தின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் டேவிட் நிர்மல் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். லாரி மீது மோதிய வாகனத்தை மீட்க தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் வெகுநேரம் போராடி வாகனத்தையும், டேவிட் நிர்மல் உடலையும் மீட்டனர்.

    பின்னர் டேவிட்நிர்மல் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பலியான டேவிட் நிர்மலுக்கு திருணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்த விபத்து சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல் ரெயில்வே பாலம் மிகவும் குறுகலாகவே அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் நத்தம், சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, காரைக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள், வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப்பகுதி மக்கள் வர்த்தக ரீதியாக பொருட்கள் வாங்க இந்த பாதையில்தான் திண்டுக்கல்லுக்கு வருகின்றனர்.

    மேலும் இந்த பகுதியில் இருந்து கருவேல மரங்கள் லோடு ஏற்றி செல்லும் லாரிகளும், ரெயில் நிலையத்தில் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் கொண்டு செல்லும் லாரிகளும் இந்த பகுதி வழியாகத்தான் செல்கின்றன.

    சில நேரங்களில் இந்த லாரிகளை டிரைவர்கள் சாலை ஓரமாக நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் சாலையோரம் லாரிகளை நிறுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதையும் மீறி லாரிகள் நிறுத்தப்படுவதால் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×