search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே ஓடும் பஸ்சில் ரூ.20 லட்சம் கொள்ளை - நிதி நிறுவன வாடிக்கையாளர் உள்பட 5 பேர் சிக்கினர்
    X

    மதுரை அருகே ஓடும் பஸ்சில் ரூ.20 லட்சம் கொள்ளை - நிதி நிறுவன வாடிக்கையாளர் உள்பட 5 பேர் சிக்கினர்

    மதுரை அருகே ஓடும் பஸ்சில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என்று கூறி ரூ.20 லட்சம் கொள்ளை நடந்த சம்பவத்தில் தனியார் நிதி நிறுவன வாடிக்கையாளர் உள்பட 5 பேர் சிக்கினர்.
    மதுரை:

    சிவகங்கையில் 6 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட தனியார் நிதி நிறுவன கிளையில் அதே ஊரைச்சேர்ந்த சரவணன், அரவிந்த்குமார் ஆகியோர் பணிபுரிகின்றனர். இருவரும் கடந்த 9-ந்தேதி மாலை நிதி நிறுவனத்தில் வசூலான ரூ.20 லட்சத்தை பெட்டியில் எடுத்துக்கொண்டு மதுரையில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.

    வரிச்சியூர் அருகே அவர்கள் சென்ற அரசு பஸ்சை 4 பேர் கொண்ட குழுவினர் திடீரென்று வழிமறித்து நிறுத்தினர். பஸ்சில் ஏறிய அவர்கள் தங்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் என்று கூறி சரவணன், அரவிந்த்குமார் ஆகியோரை கீழே இறக்கினர்.

    பிறகு இருவரையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர். சிவகங்கை ரோட்டில் சக்குடி விலக்கு பகுதியில் இருவரிடமும் இருந்து ரூ.20 லட்சம், 3 செல்போன்களை பறித்துக்கொண்டனர்.

    இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் பணம் பறித்தவர்கள் போலி தேர்தல் பறக்கும்படையினர் என்று தெரியவந்தது.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. நல்லு மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த், முத்துபாண்டியன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    தனியார் நிதிநிறுவனத்துக்கு அடிக்கடி வந்து செல்லும் ஒருவர், சரவணன், அரவிந்த்குமார் ஆகியோர் ரூ.20 லட்சத்துடன் மதுரைக்கு புறப்படுவதை தெரிந்துகொண்டதுடன், இருவரையும் பின் தொடர்ந்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து வழிப்பறி கும்பலுக்கும் அவர் தகவல் கொடுத்துள்ளார். இரு ஊழியர்களுடன் மதுரைக்கு புறப்பட்ட பஸ்சை கண்காணித்து அவர்கள் பணம் பறித்துள்ளனர். நிதி நிறுவன பகுதியில் இருந்து பேசிய நபர்களின் செல்போன் டவர் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

    வாடிக்கையாளர் ஒருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளோம். இதில் 5 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×