search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால் பூக்கள் வரத்து அதிகரிப்பு- விலை சரிவு
    X

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால் பூக்கள் வரத்து அதிகரிப்பு- விலை சரிவு

    சேலம் மாவட்டத்தில் பெய் மழையால் பூக்கள் வரத்து தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. பூக்களின் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் முதல் அக்ரஹாரத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த பூ மார்க்கெட்டுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விளையும் பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டன. குறிப்பாக ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகள் கடும் வறட்சியை சந்தித்துள்ளன. இந்த பகுதிகளில் விவசாயம் அதிக அளவில் பாதித்துள்ளது.

    நடப்பாண்டில் இந்த பகுதிகளில் பாசனத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாததால் பூச்செடிகள் கருகியது. இதனால் பூக்கள் உற்பத்தி குறைந்ததால் சேலம் மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரமாக பூக்கள் வரத்து குறைவாக இருந்தது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் நீரின்றி கருகிய பூச்செடிகள் துளிர் விட்டுள்ளது. மழையை தொடர்ந்து பூச்செடிகளில் அதிக அளவில் பூக்க தொடங்கி உள்ளது. இதனால் சேலம் மார்க்கெட்களுக்கு பூக்கள் வரத்து தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.

    கடந்த வாரம் சேலம் மார்க்கெட்டுக்கு 2 டன் முதல் 3 டன் வரை வந்த சம்பங்கி பூக்கள் தற்போது 8 டன் வரை விற்பனைக்கு வருகிறது. இதே போல குண்டு மல்லி பூக்களின் வரத்தும் 10 டன் வரை அதிகரித்துள்ளது. மேலும் சித்திரை மாதம் முடிந்ததால் கோவில் திருவிழாக்கள் மற்றும் சுபமுகூர்த்தமும் குறைந்துள்ளது. இதனால் பூக்களின் தேவை குறைந்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த வாரம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி பூ விலை கடுமையாக குறைந்து இன்று 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 200 ரூபாய்க்கு விற்ற அரளி ஒரு கிலோ 110-க்கும், 150 ரூபாய்க்கு விற்ற ரோஸ் 80 ரூபாய்க்கும், 600-க்கு விற்ற கனகாம்பரம் 250-க்கும் விற்பனையாகிறது.

    இதே போல 300 ரூபாய்க்கு விற்பனையான குண்டு மல்லி 140-க்கும், சன்னமல்லி 160-க்கும், 150-க்கு விற்ற சாமந்தி 80 க்கும், 300-க்கு விற்பனையான பெங்களூரு ரோஸ் 140-க்கும் விற்பனையாகிறது. பூக்களின் இந்த விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இனி வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×