search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வரத்து குறைவால் மீன் விலை உயர்வு
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வரத்து குறைவால் மீன் விலை உயர்வு

    ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் மீன் மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன் விலை அதிகரித்துள்ளது.
    கீழக்கரை:

    தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகள் அனைத்தும் கரை ஏற்றம் செய்யப்பட்டு பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது சிறிய படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை மற்றும் திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, காரங்காடு, வட்டாணம், பாசிப்பட்டினம், எஸ்.பி. பட்டிணம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை. இதனால் மீன் மார்க்கெட்டுக்கு சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    இதன் காரணமாக மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நகரை மீன், ஊடகம், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேசுவரம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களே விற்பனைக்கு வருகிறது.

    அந்த மீன்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட மீன்களாகவே உள்ளது. வேறு வழியின்றி மீன் பிரியர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். குறிப்பாக நகரை, செங்கனி, பாறை மீன்கள் ஒரு கிலோ ரூ.500-க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.450 முதல் ரூ.500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதால் வெளியூர்களில் வசிப்பவர்கள் குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இதனால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்தும் வாங்கி செல்கின்றனர். ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் மீன் மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்துள்ளது.
    Next Story
    ×