search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரங்களை கோவைக்கே கொண்டு செல்ல வேண்டும்- கலெக்டரிடம் இளங்கோவன் மனு
    X

    வாக்குப்பதிவு எந்திரங்களை கோவைக்கே கொண்டு செல்ல வேண்டும்- கலெக்டரிடம் இளங்கோவன் மனு

    புதிதாக தேனிக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை கோவைக்கே கொண்டு செல்ல வேண்டும் என்று கலெக்டரிடம் இளங்கோவன் மனு அளித்துள்ளார். #elagovan #opanneerselvam

    தேனி:

    புதிதாக தேனிக்கு கொண்டு வரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மீண்டும் கோவைக்கே கொண்டு செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

    கோவையில் இருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று இரவு தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து முறைகேட்டில் ஈடுபட ஆளுங்கட்சியினர் முயற்சி மேற்கொள்வதாக கூறி எதிர்கட்சியினர் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பல்லவி பல்தேவ் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து அவர்கள் திரும்ப சென்றனர்.

    இதனிடையே இன்று தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் புதிதாக கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை மீண்டும் கோவைக்கே எடுத்து செல்ல வேண்டும்.

    எந்த தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கான அவசியமே ஏற்பட வில்லை. அதுபோன்ற நிலையில் மீண்டும் 2 மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறுவது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். இளங்கோவனுடன் ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் தி.மு.க. சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    வெளியே வந்த பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முற்றிலும் நிறைவடைந்த பிறகு புதிதாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் இந்த தொகுதியில் வெற்றி பெற மாட்டார் என்பதை தெரிந்து கொண்டு வாரணாசி சென்று பிரதமர் மோடியிடம் முறையிட்டுள்ளார். அவரது ஆசீர்வாதத்துடன் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டதோ? என சந்தேகம் எழுந்துள்ளது.

    தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் ஓ.பன்னீர் செல்வமோ அவரது மகனோ வெற்றி பெறப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்து எதிர்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். தற்போது புதிய 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டது எதிர்கட்சியினரை மட்டுமின்றி பல்வேறு தரப்பினரையும் சந்தேகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×