search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் கனமழையால் ரெயில் நிலையம் முன்புள்ள சாலையில் குளம் போன்று தண்ணீர் தேங்கியது.
    X
    மதுரையில் கனமழையால் ரெயில் நிலையம் முன்புள்ள சாலையில் குளம் போன்று தண்ணீர் தேங்கியது.

    மதுரை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது

    மதுரை மாவட்டத்தின் திருமங்கலம், மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள், திருப்பரங்குன்றம், கப்பலூர், அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.
    மதுரை:

    தமிழகம் முழுவதும் கத்தரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பானி புயலால் மழை வரும் என எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு புயல் திசை மாறியதால் ஏமாற்றமே மிஞ்சியது.

    இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

    ஆனால் மதுரை மாவட்டத்தில் மட்டும் மழையின்றி வறண்ட வானிலை நிலவியதால் வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்தது. நாள்தோறும் 105 டிகிரிக்கு மேல் வெப்ப அளவு பதிவானது. மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் மதுரையில் மழை பெய்யவில்லை.

    இந்த நிலையில் நேற்று பகலில் வழக்கத்தை விட அனல்காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்தது. மாலை 4 மணியளவில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு வந்தன. குளிர்ந்த காற்று, இடி-மின்னலுடன் 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது.

    முதலில் சாரலாக விழுந்த மழை சிறிது நேரத்தில் கனமழையாக பெய்தது. மதுரை நகரின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. 5 மணிக்கு தொடங்கிய மழை 7 மணி வரை கொட்டித்தீர்த்தது. இதனால் மதுரை நகரின் முக்கிய பகுதிகளான மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகள், விளக்குத்தூண், மாசி வீதிகள், பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது.

    இதே போல் மதுரை மாவட்டத்தின் திருமங்கலம், மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள், திருப்பரங்குன்றம், கப்பலூர், அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    Next Story
    ×