search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிர் இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் பஸ் மறியல்
    X

    பயிர் இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் பஸ் மறியல்

    தேவகோட்டையில் பயிர் இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டையை அடுத்த கண்ணங்குடி ஒன்றிய பூசலாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2017-18-ம் ஆண்டிற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். அதில் சுமார் 2 ஆயிரத்து 189 பேர் பணம் கட்டி இருந்தனர். ஆனால் அதில் 1,693 பேருக்கு மட்டும் பயிர் இழப்பீட்டு தொகை வந்துவிட்டது. மீதமுள்ளவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படவில்லையாம். மேலும் பயிர் காப்பீடு கட்டணம் செலுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததையொட்டி மாவட்டம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில் சந்தேகத்திற்கிடமான பலருக்கு தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.3 கோடி அளவிற்கு பணம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இழப்பீடு தொகை வழங்குவது நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் அதில் நிலுவையில் உள்ளவர்கள் நேற்று கூட்டுறவு வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டு பல மணி நேரம் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு அவர்கள் கண்டதேவி-தேவகோட்டை சாலையில் பஸ்களை மறித்து சாலை மறியல் செய்தனர். அப்போது என்ன காரணத்திற்காக பணம் வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தினர். தகவலறிந்து வந்த தேவகோட்டை தாசில்தார் மெசியதாஸ் தலைமையில் வருவாய்த் துறையினர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இழப்பீடு வழக்குவது தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. அதன் அறிக்கை தாலுகா அலுவலகம் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.

    எனவே அடுத்த வாரம் தகுதியானவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று கூறினர். அதைத்தொடர்ந்து மறியல் நடத்திய விவசாயிகள் கலைந்து சென்றனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×