search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரி சோதனை
    X

    லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரி சோதனை

    லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. #ITRaids #LotteryMartin
    சென்னை:

    கோயம்புத்தூர், காந்திநகரை சேர்ந்தவர் தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டின். இவர் லாட்டரி விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறந்து வருகிறார். இதனால் ‘லாட்டரி ராஜா’ (லாட்டரி கிங்), லாட்டரி மார்ட்டின் என்று அழைக்கப்பட்டு வந்தார்.

    சென்னை உள்பட நாடு முழுவதும் இவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வருமானவரி புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டின், கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பதாக வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக அவரது அலுவலகம் மற்றும் வீடுகளை தீவிரமாக கண்காணித்து வந்தோம்.

    இந்தநிலையில் கோயம்புத்தூர், சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி மற்றும் ஐதராபாத் உள்பட நாடு முழுவதும் அவருக்கு சொந்தமான சுமார் 70 இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இதில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது மகன் சார்லஸ் மார்ட்டின் நடத்தும் தொலைக்காட்சி சேனல் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சோதனை நடந்தது.

    மார்ட்டின் முக்கிய தொழிலாக லாட்டரி விற்பனை செய்து வருகிறார். மேற்கு வங்காளம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில், மாநில அரசுகளிடம் ஒப்பந்தம் செய்து, முகவர்களை நியமித்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதுதவிர பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    வருமானவரி சோதனையில் அவரது தொழில் சம்பந்தமான பல்வேறு முக்கிய ஆவணங்கள் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஆவணங்களின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது ஆய்வுக்கு பிறகே தெரியவரும். பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதா? என்பது குறித்து இப்போது தெரிவிக்க இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ITRaids #LotteryMartin
    Next Story
    ×