search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 சட்டப்பேரவை தொகுதி தேர்தல்- மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு
    X

    4 சட்டப்பேரவை தொகுதி தேர்தல்- மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

    4 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிக்கப்படுகிறது. #TNByPolls #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற, சட்டமன்ற இடைதேர்தல்களில் அவரது கட்சி களம் இறங்கியது.

    தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலிலும் களம் இறங்குவதாக அறிவித்த கமல் தனது பிரசார பயணத்தையும் வெளியிட்டார்.

    மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில் அவர் மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை. இன்று வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.

    இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூறியதாவது:

    ‘4 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் உறுதியாக போட்டியிடுகிறோம். வேட்பாளர் பட்டியல் இன்று மாலை தயாராகி விடும். நாளை அறிவிக்கப்படும்.


    நாளையே வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் விடுமுறை என்பதால் வேட்பாளர்கள் வரும் திங்கள் கிழமை மனு தாக்கல் செய்வார்கள். இந்த 4 தொகுதி தேர்தல் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் செய்த அதே தீவிர பிரசாரத்தை இந்த 4 தொகுதிகளுக்கும் கமல்ஹாசன் தர இருக்கிறார். அதற்காக சூறாவளி சுற்றுப் பயணத்துக்கு தயாராகி விட்டார்.

    இந்த தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்க அறிவிப்பு வெளியிடவில்லை. அறிவிப்பு இல்லாமல் மாவட்ட செயலாளர்கள் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெற்றுதான் வேட்பாளர்கள் தேர்வு செய்துள்ளோம். தகுதியான, பலமான வேட்பாளர்களாக தான் இருப்பார்கள்.

    2 நாட்களாக மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற, சட்டமன்ற இடைதேர்தலுக்கான மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றது. முதலில் எல்லா தொகுதி வேட்பாளர்களும் தனித்தனியாக அழைக்கப்பட்டு தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தலில் அவர்களுக்கு இருந்த நடைமுறை பிரச்சனைகள், நிர்வாகிகளின் ஒத்துழைப்பு ஆகியவை பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    அவர்களின் கருத்துகளை கவனத்தில் கொண்டு அடுத்து எல்லா மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை நடந்தது. இதில் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு கருத்துகளை கேட்டுக்கொண்டார். வேட்பாளர்களின் பிரச்சனைகளை கவனத்துடன் கேட்டார். இந்த மதிப்பாய்வு கூட்டம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 4 தொகுதிகளுக்கான தேர்தல் உள்பட இனிவரும் தேர்தல்களில் எங்கள் வியூகம் வேறு விதமாக இருக்கும்’.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #TNByPolls #KamalHaasan #MakkalNeedhiMaiam
    Next Story
    ×