search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதலில் டாக்டர் பலி
    X

    காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதலில் டாக்டர் பலி

    காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டாக்டர் பலியானார். தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.
    புதுச்சேரி:

    சென்னை திருவான்மியூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டீனாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மகன் கோபால கிருஷ்ணன் (வயது 24). இவர் பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து முடித்து அங்குள்ள விடுதியில் தங்கி பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு கோபாலகிருஷ்ணன் புதுவை பல்கலைக்கழக விடுதியில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நண்பரை சந்தித்து பேசி விட்டு விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    சின்ன காலாப்பட்டில் வந்த போது கோபாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே பெரிய காலாப்பட்டை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உமாநாத் (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் அதிவேகமாக மோதிக் கொண்டது.

    இதில், தூக்கி வீசப்பட்ட கோபாலகிருஷ்ணன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உமாநாத்துக்கும் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி டாக்டர் கோபால கிருஷ்ணன் பரிதாபமாக இறந்து போனார். உமாநாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி, ஏட்டு தனசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் இறந்த டாக்டர் கோபாலகிருஷ்ணனின் தாயும் சென்னையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். சங்கரநாராயணன் தம்பதியினருக்கு கோபால கிருஷ்ணன் ஒரே மகன் ஆவார்.

    கோபாலகிருஷ்ணன் பயிற்சி முடித்ததும் சென்னையில் தனியாக கிளினிக் தொடங்க அவரது பெற்றோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் டாக்டர் கோபாலகிருஷ்ணன் இறந்து போனதால் அவரது உடலை பெற்றோர் பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
    Next Story
    ×